எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாத நாமக்கல் நகராட்சி

By காமதேனு

நாமக்கல் நகராட்சியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ஒரே ஒரு பெண் கவுன்சிலரும் திமுகவில் ஐக்கியமானார். அதனால் நகராட்சியில் எதிர்க்கட்சியே இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. நகராட்சித் தேர்தலில் 22 மற்றும் 25வது வார்டுகளில் திமுக ஆதரவு பெற்ற சுயேச்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 37 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பாஜக, மநீம உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில் நாமக்கல் நகராட்சி 29வது வார்டில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ரோஜாரமணி என்பவர் வெற்றி பெற்றார். இது அதிமுகவினருக்கு ஆறுதலைத் தந்தது. இந்நிலையில் இவர் தனது கணவர் சுரேஷூடன் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்பி, எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோரை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தொடர்ந்து திமுக உறுப்பினர்களுடன் சென்று நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலராக பொறுப்பேற்றுக் கொண்டார். நகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ஒரே ஒரு உறுப்பினரும் திமுகவில் ஐக்கியமானதால் மொத்தமுள்ள 39 வார்டுகளையும் திமுக கைப்பற்றியது. இதனால் நாமக்கல் நகராட்சியில் எதிர்க்கட்சியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரில் உள்ள நாமக்கல் நகராட்சியில் அதிமுக உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லாதது அந்த கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE