திமுக, அதிமுகவை அதிரவைத்த சுயேச்சை உறுப்பினர்

By கி.பார்த்திபன்

குமாரபாளையம் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் 18 உறுப்பினர்களுடன் தனி வாகனத்தில் வந்து பதவியேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துச் சென்றார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 10 மற்றும் சுயேச்சை 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. இம்முறை நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்பதால் அவர்களை நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில் குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு 17 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. திமுக, அதிமுக என யாருக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. இதனால் இரு பெரு கட்சிகளும் சுயேச்சைகளின் தயவில் தலைவர் பதவியை பிடிக்க முனைப்பு காட்டி வருகின்றன. இச்சூழலில் திமுகவைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரிடமும் மனு அளித்தனர்.

அந்த மனுவில், குமாரபாளையம் நகராட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உள்ளது. இதனால் சமூக விரோதிகள் துணையுடன் தங்களை கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பதவிப்பிரமாணம் முடிந்து வீட்டுக்கு சென்று சேரும் வரையும், மார்ச் 4ம் தேதி நடைபெறும் நகரமன்ற தலைவர் தேர்தல், துணை தலைவர் தேர்தலிலும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தெரிவித்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய புகார் மாவட்ட அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சூழலில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் 33 உறுப்பினர்களும் 4 குழுக்களாக பிரிந்து தனித்தனி வாகனங்களில் காவல்துறையினர் பாதுகாப்புடன் வந்து பதவியேற்றுச் சென்றனர். நகராட்சி அலுவலகத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுதொடர்பாக குமாரபாளையம் அரசியல் கட்சியினர் வட்டாரத்தில் விசாரித்தபோது, நகர்மன்ற தலைவர் பதவியை பிடிக்க 17 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனினும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லை. திமுகவுக்கு 3 உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 7 உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. இதனால் அவர்கள் சுயேச்சைகளை வளைக்க திட்டமிட்டுள்ளனர். இச்சூழலில் திமுகவில் சீட் கேட்டு கிடைக்காததால் சுயேச்சையாக 31வது வார்டில் களம் இறங்கி வெற்றி பெற்ற த.விஜய்கண்ணன் என்பவர் திமுக, அதிமுக மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் சேர்மனாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் தனது ஆதரவாளர்களான 18 உறுப்பினர்களுடன் தனி வாகனத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து பதவியேற்றுச் சென்றார். இதுபோல் திமுகவில் சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியசீலன் மற்றும் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுப்ரமணி தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக வந்து பதவியேற்றுச் சென்றனர்" என்றனர்.

சேர்மன் பதவியை பிடிக்க 17 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் 18 உறுப்பினர்களுடன் பதவியேற்றுச் சென்றது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE