மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா: சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

By காமதேனு

பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு, கேரளத்தில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய அச் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி, “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு கேரள மாநிலத்திலிருந்து குறிப்பாக கொல்லம் மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டிவந்து, பகவதி அம்மனை தரிசிப்பது வழக்கம். இந்தக் கோயிலுக்கு ரயில் மார்க்கம் வரவேண்டுமானால் இரணியல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பேருந்துகளில் திங்கள்நகர் வழியாக மண்டைக்காடு செல்ல வேண்டும்.

பகவதி அம்மன் கோயிலின் மாசி திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 7-ம் தேதி முடிய நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவேண்டும். திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆற்றின்கால் பொங்கல் திருவிழாவுக்கு தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு ரயில்களையும், அந்த ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தங்களையும் பல ஆண்டுகளாகவே செய்து வருகிறது. இதேபோல், அதே கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் முக்கியக் திருவிழாவான பகவதி அம்மன் திருவிழாவிற்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

கரோனா காலகட்டத்துக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு தினசரி ஆறு பயணிகள் ரயிலும், மறுமார்க்கத்தில் நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஐந்து பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. தற்போது இந்த மார்க்கத்தில் மிகக்குறைந்த அளவே பயணிகள் ரயில்கள் அதுவும், எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகின்றது. பகவதி அம்மன் திருவிழா காணவரும் பக்தர்ளின் வசதிக்காக கரோனா காலகட்டத்துக்கு முன்பு இயக்கிய பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.

இதேபோல் திருவனந்தபுரம் - நாகர்கோவில் மார்க்கத்தில் இயங்கும் நாகர்கோவில் - மங்களூர் ஏரநாடு, திருநெல்வேலி-பிலாஸ்பூர், திருநெல்வேலி- ஜாம்நகர், கன்னியாகுமரி – திப்ருகர், நாகர்கோவில் - காந்திதாம், நாகர்கோவில் - சாலிமார் போன்ற அனைத்து வராந்திர ரயில்களும் திருவிழா சமயத்தில் இரணியல் ரயில் நிலையத்தில் ஓரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொல்லம் மாவட்டத்திலிருந்து அதிகம் பக்தர்கள் வருவதையொட்டி கொல்லம் - நாகர்கோவில் மார்க்கத்தில் பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும். இதேபோல் நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயிலைக் கொல்லம் வரை நீட்டிக்கவும், கொல்லம் - திருவனந்தபுரம் பயணிகள் ரயிலை திருவிழா சமயத்தில் மட்டும் நாகர்கோவில் வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE