கிராம பஞ்சாயத்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக தமிழக அரசை அணுகுமாறு
அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரதினம், குடியரசு தினங்களில் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதாகவும், அவர்கள் பஞ்சாயத்து தலைவர் இருக்கைகளில் அமரும் உரிமை மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்
அதேபோல, ஆவணங்களை கையாள விடாமல் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் தடுக்கப்படுவதாகவும், அவர்களை ஜாதி பெயரை சொல்லி அழைப்பதுடன், பிற சமுதாயத்தைச் சேர்ந்த துணைத் தலைவர்களால் மிரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஜாதிய ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டுமென கோரிய இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு எப்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இன்று கிராம பஞ்சாயத்துகளில் கேமரா பொருத்த உத்தரவிட்டால், நாளை அது ஒவ்வொரு இடமாக நீண்டு கொண்டே போகும் என தெரிவித்தனர். இது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் உரிய அரசு துறையை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.