மீறி யாராவது வேட்பு மனு தாக்கல் செய்தால் தேர்தலே நடக்காது!

By குள.சண்முகசுந்தரம்

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மக்கள் பிரநிதிகள் இன்று முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில், அடுத்ததாக தலைவர், மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல்கள் குறித்து ஏகத்துக்கும் எதிர்பார்ப்புக் கிளம்பி இருக்கிறது.

பெருவாரியான இடங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றும் சூழல் இருந்தாலும் ஒரு சில இடங்களில் திமுகவுக்குள்ளேயே போட்டி பலமாக இருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக தலைமை அறிவித்த வேட்பாளரை பின்னுக்குத் தள்ளிவிட்டு திமுக சுயேச்சைகளும் தங்களது ‘பலத்தை’க் காட்டி தலைவர், துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றினார்கள். அப்படி குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்தவர்களை திமுக வின் பிரநிதிகளாக கட்சியும் அங்கீகரித்துக் கொண்டது. அதனால், இந்த முறையும் சில இடங்களில் வலுவான நிலையில் இருக்கும் சுயேச்சைகளும், திமுக சுயேச்சைகளும் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு கவுன்சிலர்களிடம் தலைவர், மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்காக பேரம் பேசி வருகிறார்கள். சிலர், பைனான்சியர்களை கூடவே அழைத்துக் கொண்டுபோய் பேரம் பேசி வருகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சில இடங்களில் திமுக சுயேச்சைகளுடன் அதிமுகவினரும் பாஜகவினரும் ரகசிய ஒப்பந்தம் பேசிக்கொண்டிருக் கிறார்கள். இம்முறை செல்வாக்குள்ள நபர்கள் பலபேர் வென்றிருப்பதால் யாரை தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வேட்பாளராக அறிவிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் திமுக தலைமையும் திணறி வருகிறது. எனினும் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திமுக கவுன்சிலர்களுக்கு திமுக தலைமை கட்டளை பிறப்பித்திருக்கிறது. ஆனாலும் பேரங்கள் ஓய்ந்தபாடில்ல்லை.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் ஒன்றான தேவகோட்டையை அதிமுக - அமமுக கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் சொந்தமாவட்டமான சிவகங்கையில் அதிமுக - அமமுக கூட்டணி வசம் ஒரு நகராட்சி செல்வது ஆளும் தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, அமைச்சர் பெரியகருப்பனுக்கு அரசியல் ரீதியாக இது பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

மாவட்டத்தின் மற்ற மூன்று நகராட்சிகளையும் திமுக கைப்பற்றும் நிலை இருந்தாலும் காரைக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியில் இருக்கும் மூன்று நபர்களுமே வலுவான பின்னணி கொண்டவர்கள் என்பதால் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் மற்ற இருவரும் கூட்டணி சேர்ந்து கொண்டு போட்டிக்கு வரலாம் என்ற பேச்சு இருக்கிறது. ஏற்கெனவே இப்படி நடந்த வரலாறும் உண்டு என்பதால் அமைச்சர் பெரியகருப்பன் மிகவும் கவனமாகவே காய் நகர்த்துகிறார்.

இது தொடர்பாக காரைக்குடி திமுக கவுன்சிலர்களை அழைத்துப் பேசிய அவர், “தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தலைமை யாரை அறிவிக்கிறதோ அவர்கள் மட்டும் தான் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதை மீறி திமுக தரப்பில் வேறு யாராவது வேட்பு மனு தாக்கல் செய்தால் தேர்தலே நடக்காது; ஒத்திவைக்க வைத்து விடுவேன்” என்று எச்சரித்திருப்பதாக திமுக தரப்பில் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரைக்குடி திமுகவினர் கட்டுப்படுவார்களா அல்லது முந்தைய வரலாறு மீண்டும் திரும்புமா என்பது நாளை மறு தினம் தெரிந்துவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE