உக்ரைன் போர்: தமிழகம் போல மற்ற மாநில அரசுகளும் உதவ வேண்டும்!

By கவிதா குமார்

உக்ரைன் மீது ரஷ்யா ஏழாவது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் உயிரிழந்துள்ளது இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்களின் குடும்பத்தாருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்கப்போன இந்திய மாணவர்கள், மத்திய – மாநில அரசுகள் உதவியுடன் தாயகம் திரும்பி வருகின்றனர். நேற்று தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களில் சிலருடன் பேசினோம்.

கீர்த்தனா

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் மகள் கீர்த்தனா உக்ரைனில் உள்ள உசரேத் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். தாயகம் திரும்பிய கீர்த்தனா கூறுகையில், “பல்கலைக்கழகத்தில் என்னுடன் படித்த 170 பேர் இந்தியா திரும்பினது ரொம்ப மகிழ்ச்சி. இதில் 27 பேர் தமிழர்கள். உக்ரைனில் குண்டு வெடிக்க ஆரம்பிச்சுவுடனே, முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை உடனடியா அவங்கவங்க ஊருக்கு அனுப்ப முடிவு செஞ்சாங்க. போன 28-ம் தேதி உக்ரைனில் இருந்து கிளம்பி, ஹங்கேரி வந்தோம். அங்கு தான் 9 மணி நேரம் காத்திருந்தோம். அங்கிருந்து டெல்லி வந்து பின் சென்னைக்கு விமானத்துல வந்தோம். நாங்க பத்திரமா இந்தியா திரும்ப காரணமான மத்திய அரசு, மாநில அரசுக்கு மனமார்ந்த நன்றி” என்று கூறினார்.

வெளிநாட்டில் படிப்பது ஏன்?

‘இந்தியாவிலேயே எத்தனையோ புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் போது வெளிநாடு போய் ஏன் மருத்துவம் படிக்க விரும்பினீர்கள்?’ என்று நாம் கேள்வி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கீர்த்தனா, “தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி சீட் எண்ணிக்கை ரொம்ப குறைவு. நல்ல படிச்சு மார்க் எடுத்தாலும் சீட் கிடைப்பதில் சிக்கல் தமிழ்நாட்டில் இருக்குது. அதற்காக நான் இடஒதுக்கீட்டிற்கு எதிரான பேசுறேனு நினைக்காதீங்க. அனைவருக்கும் ஏற்றத்தாழ்வில்லாத கல்வி கிடைக்கணும்றது தான் என் விருப்பம். அப்படி கிடைச்சாலே யாரும் வெளிநாடு போக மாட்டாங்க” என்றார்.

சோனியா

தையல் தொழிலாளி மகள்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி சைலாமேரி மகள் சோனியா. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். அவரும் தற்போது போர் பதற்றம் காரணமாக தாயகம் திரும்பியுள்ளார்.

அவரிடம் பேசியபோது, “உக்ரைனில் போர் தொடங்கியவுடன், எப்போது சொந்த ஊருக்குப் போவது? செலவுக்கு அம்மா என்ன செய்வார் என ரொம்ப கவலையில் இருந்தேன். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடுத்த முயற்சியால் எங்களைப் போன்று கஷ்டப்படும் மாணவர்கள் விரைவாக இந்தியா திரும்ப முடிஞ்சது. அதற்கு முதல் காரணமான முதல்வருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. விமானத்தை விட்டு இறங்குனவுடனே அமைச்சர் மஸ்தான் ஸார், பூங்கொடுத்து வரவேற்றார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அவருக்கும் நன்றி” என்றார்.

அவர் சொன்ன மற்றொரு விஷயம் தான் கவலையளிப்பதாக இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த பல மாநில அரசுகள், உக்ரைனில் சிக்கியுள்ள தங்கள் மாநில மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் சுணக்கம் காட்டுவதாக சோனியா புகார் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் படித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும், போர் நடந்த இடத்திற்கும் ரொம்ப தூரம். அதனால், எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால், என்னோட நண்பர்கள் பலர், போர் நடக்கும் கீவ் நகரில் சிக்கியிருக்காங்க. அவர்கள் ஒடிசா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவங்க. நம்ம மாநில அரசு எடுத்த முயற்சியைப் போல, மற்ற மாநில அரசுகளும், குறிப்பாக மத்திய அரசும் கூடுதல் கவனம் செலுத்தி கீவ் நகரில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவர்களை மீட்கணும். ஏன்னா, அவங்கு அங்க உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கிறாங்க. ரொம்ப வருத்தமா இருக்கு. எனவே, அவர்களும் இந்தியா விரைவில் திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.

விக்னேஷ்

ஊட்டி மாணவர்

ஊட்டியைச் சேர்ந்த விக்னேஷ், உக்ரைனில் இருந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். உக்ரைனில் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் அவர் கூறுகையில், “தமிழகத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 35 பேர் பத்திரமாக உக்ரைனில் இருந்து திரும்பிட்டோம். நாங்களெல்லாம் ஆர்மீனியா வழியாக ஹங்கேரி வந்து அங்கிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தோம். மத்திய, மாநில அரசு உதவியால் தான் நாங்க சொந்த ஊர் திரும்ப முடிந்தது” என்றார்.

கடன் வாங்கி படிக்கிறேன்

‘மீண்டும் படிப்பதற்கு உக்ரைன் செல்வீர்களா?’ என்று நாம் கேட்டதற்கு, “தமிழகத்தில் மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் கிடையாது. மருத்துவம் படிக்க மாணவர்கள் விரும்பினாலும், அதற்கேற்ற அளவிற்கு சீட்டும் இல்லை. இதன் காரணமாகத்தான் வெளிநாட்டில் போய் படிக்கிறேன். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் தமிழத்தின் மருத்துவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படணும். அதற்கேற்ற வகையில் மருத்துவக் கல்லூரி சீட்டுக்களின் எண்ணிக்கையையும் உயர்த்தணும். அப்படி செய்தால் கண் காணாத தேசத்தில போய் நாங்கள் எதற்குப் படிக்கப் போறோம்? எங்கப்பா கடன் வாங்கி தான் என்னைப் படிக்க வைக்கிறார். எனவே, போர் பதற்றமெல்லாம் முடிஞ்ச பிறகு மீண்டும் உக்ரைனுக்குக் கட்டாயம் சென்று முடிப்பேன். தமிழகத்தில் கட்டாயம் நான் மருத்துவராகப் பணியாற்றுவேன்’ என்று விக்னேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

காயத்ரி

திருவண்ணாமலை மாணவி

தாயகம் திரும்பிய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த மாணவி காயத்ரி கூறுகையில், “வடமாநிலங்களைச் சேர்ந்த என் நண்பர்கள் பலர் உக்ரைன்ல சிக்கியிருக்காங்க. அவங்க பத்திரமாக இந்தியா வருவதற்கான ஏற்பாட்டை பிரதமர் மோடி செய்யணும். எங்க பல்கலைக்கழகத்துல படித்த 240 பேர் பத்திரமாக திரும்ப நம்ம தமிழக முதல்வர் செய்த ஏற்பாடு சிறப்பு. தமிழக மாணவர்கள் வருவதற்கு அவர் சிறப்பு விமானம் ஏற்பாடு செஞ்சு தந்தாரு. அருமையான உணவு. இலவசமாகவே நாங்க தமிழகம் பத்திரமாக திரும்பியிருக்கோம்னா அதுக்கு நம்ம தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கை தான் காரணம். உக்ரைன்ல எப்ப போர் முடியும்? மறுபடி எப்ப படிக்கப் போவோம் என்ற நினைவாகவே இருக்கு” என்றார்.

தூதரகத்தின் ட்வீட்டால் அச்சம்

‘உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் கீவ் நகரை விட்டு அவசரமாக வெளியேற வேண்டும்’ என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டர் மூலம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தமிழகம் திரும்பியுள்ள மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவர்களைப் பத்திரமாக மீட்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகம் திரும்பியுள்ள மாணவர்கள் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE