சுவரொட்டிகள் ஒட்டிய வேட்பாளர்களிடம் ரூ.2.67 லட்சம் வசூல்

By காமதேனு

உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சி பகுதியில் ஒட்டப்பட்ட 3705 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அதற்கான செவான 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக சென்னை மாநகராட்சி 117வது வார்டில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது சுவரொட்டி மீது திமுக-வினர் சுவரொட்டி ஒட்டியுள்ளதாக கூறி, கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வு, தேர்தலுக்காக விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஏற்கெனவே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை 3,705 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மீதமுள்ள சுவரொட்டிகளையும் ஒரு வாரத்தில் அகற்றி, சம்மந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து அதற்கான செலவை வசூலிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE