உதய சூரியன் சின்னத்தில் கேக்: முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

By காமதேனு

உதய சூரியன் சின்னத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது மனைவி, மகன், மகள், மருமகன் ஆகியோர் முன்னிலையில் அவர் கேக் வெட்டினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 69-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். உதய சூரியன் சின்னத்தில் கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது. தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோருடன் பிறந்தநாள் கேக் வெட்டினார். பின்னர், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர். இதைத்தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் மரியாதை செலுத்தினார்.

பேரன், பேத்திகளுடன் முதல்வர் ஸ்டாலின்

பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்தினார். அப்போது, பிரதமரின் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துச் செய்தியில், "கேரள- தமிழக உறவினை மேலும் வலுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். எதிர்ப்போர் கருத்துக்கு இடமளித்து, தன் எண்ணம், செயலுக்கு வலுகூட்டி செயல்படும் ஸ்டாலினுக்கு வாழ்த்து" என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே, முதல்வர் பிறந்தநாளையொட்டி #HBDTNCM என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE