மதுரை பரவை, புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கலாமீனா, வின்சி உள்பட 8 பேர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "பரவை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 8 வார்டிலும், திமுக 6 வார்டிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றிப்பெற்றனர். பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் மார்ச் 4-ல் நடைபெறுகிறது. திமுகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக கவுன்சிலர்களை தலைவர், துணைத் தலைவராக தேர்வு செய்ய ஆளும் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் திமுக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என எங்களை ஆளும்கட்சியினர் மிரட்டுகின்றனர். இதனால் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், திமுகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும் தலைவர், துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக முயல்கிறது என்றனர். இதையடுத்து பரவை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் சாலை பொன்னம்மா, திவ்யா, கார்த்திக், அஞ்சலிதேவி, சாலை மதுரம், குமார், அனுஷியா, விஜயசாந்தி, தங்கராஜ் ஆகியோரும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
அதில், அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 கவுன்சிலர்களில் 9 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இதனால் அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் தலைவர், துணைத் தலைவராக வாய்ப்புள்ளது. ஆனால் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக கவுன்சிலர்களை ஆதரிக்க வேண்டும் என எங்களை மிரட்டுகின்றனர். இதனால் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்து, 9 பேருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.