சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் நீதிமன்றப் பெண் வழக்கறிஞர் சாந்தி இன்று (பிப்.28) புகார் ஒன்றை அளித்தார். அதில் பிப்ரவரி 24 -ம் தேதி வெளியான ‘வலிமை’ திரைப்படம் வழக்கறிஞர்களைக் கிரிமினல்கள் போல் சித்தரித்துள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சாந்தி, அப்படத்தின் தொடக்க காட்சியில் வழக்கறிஞர்கள் கிரிமினல்கள் போல் சித்தரிக்கப்பட்டிருந்ததையும், குற்றச் செயல்புரியும் குண்டர்களாக வழக்கறிஞர்கள் செயல்படுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். மேலும், சமூகத்தில் பொறுப்புள்ள பணியை ஆற்றிவரும் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தி காட்சியமைப்பதும், ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் தவறாகக் காட்டுவதும் கண்டனத்துக்கு உரியது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “எத்தனை சினிமா நடிகர், நடிகைகள் போதை வழக்கில் சிக்கியுள்ளனர். அதை மையமாக வைத்து எந்தத் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஏன் படம் எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார். மேலும் இப்புகாரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.