`என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது'- ராகுல் காந்தி உருக்கம்

By எம்.சகாயராஜ்

"என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கின்றன. ஒரு தந்தையை இழப்பது என்பது எனக்கு மிகவும் வேதனையான சோதனையான சோகமான அனுபவம்தான். நான் சோகமான அனுபவத்தை திருப்பி எண்ணிப்பார்க்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் சுயமரியாதை நூல் வெளியிட்டு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உருக்கமாக பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான `உங்களில் ஒருவன்' புத்தகம் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசுகையில், "நான் என்னுடைய அண்ணன் மு.க.ஸ்டாலினை பாராட்ட விரும்புகிறேன். ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக. அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். தமிழ்நாட்டிற்கு அவர் ஏராளமான நன்மைகளை செய்து வருவதற்காக நான் அவரை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

நேற்றைய தினம் என்னுடைய தாயார் என்னை அழைத்து நாளை மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் என்று சொன்னார்கள். நான் எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு, அவருக்கு எத்தனை வயது தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்று சொன்னார்கள். 69 என்று சொன்னவுடன் சாத்தியமே இல்லை என்று என்னுடைய தயார் சொன்னார். நான் என்னுடைய தாயாரிடம் கேட்டேன். அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். 50 அல்லது 60 வயதாக இருக்கும் என்று என்னிடம் சொன்னார். அப்படி நான் சொன்னவுடன் என்னுடைய தாயார் கூகுளில் அந்த செய்தியை ஒப்பிட்டு பார்த்து நீங்கள் சொன்னது சரிதான் என்று ஒத்துக்கொண்டார்கள். இந்த புத்கத்தில் இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும். நான் எப்படி இளமையாக இருக்கிறேன் என்பதை பற்றி.

தமிழ்நாட்டிற்கு எப்போது வருவதுமே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. அதை நான் மேலோட்டமாக சொல்லவில்லை. அடிமனதில் இருந்து ஆழமான உணர்வுடன் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன்னால் நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையினை தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பாராட்டியதாக அறிந்தேன். நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது, பத்திரிகையாளர்களை பார்த்தேன். அதில் ஒருவர் என்னிடம் கேட்டார், உங்கள் உரையில் என்ன காரணத்திற்காக தமிழ்நாட்டை பற்றி குறிப்பிட்டீர்கள் என்று கேட்டார். நான் அதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் தமிழ்நாட்டின் மீது எந்த அளவுக்கு எனக்கு அன்பு இருக்கிறது என்று. நாள் வெளியே வரும்போது என்னை அறியாமல் சொன்னேன். நான் தமிழ் என்று சொன்னேன். என்னை அறியாமல் அந்த வார்த்தை வந்துவிட்டது. என்னுடைய காரில் ஏறியதற்கு பின்னால், நான் ஏன் அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். ஏன் அந்த வார்த்தைகள் உன்னுடைய வாயில் இருந்து வந்தன. நீங்கள் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. நீங்கள் தமிழ் மொழியை பேசுவதில்லை. 3 ஆயிரம் ஆண்டு பழமையான நாகரிகமுடைய மொழி தமிழ்மொழி. அந்த நாகரிகத்தைகூட தெரிந்துகொள்ள நீங்கள் முற்படவில்லை. அதற்கு பின்னாலும், எப்படி நீங்கள் தமிழர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

அந்த உரிமையை நான் எப்படி சொல்லும் அளவுக்கு எடுத்துக்கொண்டேன். நான் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது தொடர்ந்து அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பின்னர் நான் உணர்ந்தேன். ஏன் அந்த வார்த்தையை நான் சொன்னேன் என்பதை பற்றி. ஏனென்றால் என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கின்றன. ஒரு தந்தையை இழப்பது என்பது எனக்கு மிகவும் வேதனையான சோதனையான சோகமான அனுபவம்தான். நான் சோகமான அனுபவத்தை திருப்பி எண்ணிப்பார்க்கிறேன். நான் உணர்ந்தேன், என்னை தமிழன் என்று அழைத்துக் கொள்வதற்கான எல்லாம் உரிமைகளும் எனக்கு இருப்பதாக. தமிழனாக இருப்பதன் பொருள் என்ன? நான் முதலில் இந்த மண்ணுக்கு வரும்போது பணிவான குணத்துடன் இங்கு வருகின்றேன். உங்கள் வரலாற்றுக்கு, பாரம்பரியத்துக்கு நான் தலைவணங்குகிறனாகவே வருகிறேன்.

என்னுடைய நாடாளுமன்ற உரையில் பேசுகிறபோது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டேன். நாம் மாநிலங்கள் என்று சொல்கிறோம் என்றால் இந்த சொல் எங்கிருந்து வந்தது. மாநிலம் என்றால் என்ன? மண்ணைப் பற்றியது. மக்களிடம் இருந்து அந்த மண்ணின் தன்மை வருகிறது. மக்களிடம் இருந்து அவர்களது குரல் வெளிவருகிறது. அவனுடைய குரலில் இருந்த மொழி வெளிவருகிறது. மொழியில் இருந்து கலாச்சாரம் வருகிறது. கலாச்சாரத்தில் இருந்து சரித்திரம் வருகிறது. பின்னர் வரலாற்றில் இருந்து மாநிலம் உருவாகிறது. நாம் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொல்கிறபோது இது மாநிலங்களில் இருந்துதான் இந்தியா வருகிறது என்பதை நான் அழுத்தமாக சொல்கிறேன்.

எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாக மாறுகிறது. வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமாக மாறுகிறது. அந்த வார்த்தைகள் ஒன்று சேர்த்து வாக்கியங்களாக மாறி, அந்த வாக்கியங்கள் ஒன்று சேர்ந்து கவிதையாக மாறுகின்றது. எழுத்துக்களை மதிக்கவில்லையென்றால், சொற்களை மதிக்கவில்லையென்றால், வாக்கியத்தை மதிக்கவில்லையென்றால் வேறு எதையும் மதிக்கமுடியாது.

பிரதமர் இங்கு வருகிறபோதெல்லாம் பொருள் புரியாமல் தமிழ்நாட்டை பற்றி பேசுகிறார். அது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைய ஒரு பாரம்பரியமுள்ள நாடு. அவர் சொற்களை புரிந்து கொள்வதில்லை. வாக்கியங்களை புரிந்து கொள்வதில்லை. மொழியை புரிந்து கொள்வதில்லை. பின்னர் எந்த அடிப்படையில் தமிழ்நாட்டை பற்றி அவர் பேசுகிறார். அவர் குரலை புரிந்து கொள்ளாமல் உங்களுக்காக பேசுகிறேன் என்று எப்படி அவர் சொல்ல முடியும். அவர்கள் திருப்பி திருப்பி கேட்கும் எதுவுமே நீங்கள் உணர்ந்து கொள்ளாமல் பேசுகிறபோது அவர்கள் மீது என்ன மரியாதை வைத்திருக்கிறீர்கள். தமிழ்நாடு மக்கள் ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி நியாயமற்றது. அது எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் நீங்கள் அவமதிக்கறீர்கள்" என்று குற்றம்சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE