“வந்தே பாரத் ரயில் நின்று செல்லாது என்பது கரூருக்கு இழைக்கப்படும் அநீதி” - ஜோதிமணி ஆவேசம்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: வந்தே பாரத் ரயில் நின்று செல்லாது என்பது கரூருக்கு இழைக்கப்படும் அநீதி என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர் எம்.பி. அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்த செ.ஜோதிமணி கூறியதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 8 மொழிகளில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்து அனிதா போன்ற மாணவிகளின் உயிரிழப்புகள் தடுக்க முயற்சி எடுப்போம் என தெரிவித்திருந்தோம். நீட் தேர்வை மோடி அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்துவோம்.

ரயில் விபத்துகள் சாதாரணமாகிவிட்டன. ஓடிசாவில் நடந்த விபத்திலிருந்தே மீள முடியாத நிலையில் அடுத்து மேற்குவங்கத்தில் விபத்து ஏறபட்டு கொடூர மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல மழைக் காலங்களில் ரயில்வே பாலங்களில் தண்ணீர் நிற்கிறது. இதனால் ரயில் பாதை வழியே கடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது.

கரூர் மக்களவைத் தொகுதியில் 11 இடங்கள் அதுபோல உள்ளன. ரயில்வே கூட்டங்களில் இதற்கு தீர்வு காண வலியுறுத்தியும் இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது. மதுரையில் இருந்து பெங்களூரு வந்தே பாரத் கரூர் வழியாக செல்லும் நிலையில் கரூரில் நிற்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இது கரூருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய அநீதி.தமிழகத்துல் மீது செயல்படும் காழ்ப்புணர்ச்சியோடு, கரூர் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு உள்ளது. கடந்த முறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்படாமல் கரூர் புறக்கணிக்கப்பட்டது.

தற்போது வந்தே பாரத் ரயில் நின்று செல்லாது என்பது கரூரை புறக்கணிக்கும் செயலாகும். இ துகுறித்து கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன். ஆளுங்கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி உறுப்பினர்களை மக்கள் தந்துள்ளனர். மக்களால் வெறுக்கப்படக்கூடிய அரசாக மோடி அரசு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறேன். இதே போல வருகின்ற 5 ஆண்களிலும் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடு ப்பேன்.

100 நாள் வேலை வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து மக்களவை கூட்டத்தொடரில் குரல் கொடுப்போம். கடந்த முறை கல்வி, பொது மருத்துவம், மாற்றுத்திறனாளிகள நலன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இம்முறை தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.” என ஜோதிமணி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE