அரசு உத்தரவின் அடிப்படையில் ஏரியின் ஒரு பகுதி மயானமாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்த வழக்கில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒரு ஏக்கர் பரப்பளவிலான செங்குட்டை என்ற ஏரி இருப்பதாகவும், மோட்டுப்பட்டி மற்றும் ஆலமரத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த வேளாண் நிலங்களுக்கு நீராதாரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் செங்குட்டை ஏரியின் ஒரு பகுதியை மயான பூமியாக மாற்றம் செய்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மோட்டுப்பட்டி மற்றும் ஆலமரத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் மரணமடையும்போது அவர்களின் உடலை ஏரிப்பகுதியில் அடக்கம் செய்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், ஏரி நிலத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, சத்திகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.