உள்ளாட்சியில் நல்லாட்சியை சாத்தியமாக்குவது எப்படி?

By கே.கே.மகேஷ்

'உள்ளாட்சியிலும் நல்லாட்சி' என்ற கோஷத்தை முன்னெடுத்த ஆளுங்கட்சி, உள்ளாட்சியில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்திருக்கிறது. அதிமுக, பாஜக உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் சொற்ப இடங்களில் மட்டுமே வென்றிருக்கின்றன. இப்படியான சூழலில், உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியம் தானா என்று சிந்தித்துப் பார்த்தால், சிரிப்புத்தான் வருகிறது. காரணம், நிதியுமில்லை... அதிகாரமும் இல்லை... அப்பவும் நான் ராஜா கதைதான், நம் உள்ளாட்சிகளின் நிலை.

சுப.தங்கவேலன்

உள்ளாட்சியில் உண்மையிலேயே நல்லாட்சி ஏற்பட, என்னென்ன அதிகாரங்கள், நிதி ஆதாரங்கள் தேவை என்று அந்தந்த துறையில் அனுபவம்மிக்கவர்களிடம் பேசினோம்.

காங்கிரஸ் ஆட்சியிலேயே ஒன்றியத் தலைவராக இருந்து, பிறகு தமிழக அமைச்சராக உயர்ந்த திமுகவின் மூத்த தலைவர் சுப.தங்கவேலனிடம் கேட்டபோது, “நான் யூனியன் சேர்மனா இருந்த காலத்துல கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேளாண்மை, சிறுதொழில், கால்நடை பராமரிப்புன்னு அத்தனை அதிகாரமும், ஊராட்சி ஒன்றியத்துக்கிட்ட தான் இருந்தது. டாக்டர், நர்ஸ், ஆசிரியர், மாட்டு டாக்டர் பணி நியமனம், இடமாற்றம், மருந்து கொள்முதல்னு எல்லாமே எங்ககிட்டதான் இருந்தது. ஒரு ஊர்ல வாத்தியார் சரியான நேரத்துக்கு வரலைன்னா, அவரை இடமாற்றம் செய்யக்கூட எங்களுக்கு அதிகாரம் இருந்துச்சு. காலப்போக்குல என்னாச்சுன்னா, ’இவங்க வேணுமின்னே பழிவாங்குறாங்க... அந்த அதிகாரத்தை டிஇஓ கிட்ட கொடுங்க’ன்னு புகார் பண்ணுனாங்க. அப்பவும்கூட கலெக்டர் எல்லாம், ‘உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசாங்க பள்ளிக்கூடம் இருக்கிற வரைக்குத்தான் அது உருப்படியா நடக்கும்’னு சொல்லி திருப்பி அனுப்பிடுவாங்க.

அந்தக் காலத்துல எம்எல்ஏ, அமைச்சரே ஒரு பணிநியமனம், இடமாற்றம், மருத்துவ முகாம் நடத்தணும்னா ஊராட்சி ஒன்றியத்துக்கிட்டதான் முறையிடுவாங்க. காலப்போக்குல இது ஈகோவ உண்டு பண்ணிடுச்சி. அதனால, கொஞ்சம் கொஞ்சமா இந்த அதிகாரத்தைக் குறைக்கிற ஏற்பாட்டைச் செஞ்சாங்க. அதுக்குத் தோதா, உள்ளாட்சி அமைப்புகள்ல அதிகாரத்துல இருந்த சில பேர் தப்பும் பண்ணுனாங்க. கடைசியில, பெரும்பாலான அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கிட்டேயே போயிடுச்சு.

பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்தப்ப, மறுபடியும் எல்லா அதிகாரமும் பஞ்சாயத்து போர்டுக்கே திரும்ப கிடைச்சிடும்னு பேச்சுவந்தது. ஆனா, எதுவுமே நடக்கல. அவ்வளவு அதிகாரம் இருந்தும் கிராமம் கிராமமாகவேதான் இருந்துச்சிங்கிறதையும் மறுக்க முடியாது. கலைஞர் முதல்வரான பிறகுதான் எல்லா கிராமத்துக்கும் ரோடு, பஸ், மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர்னு கொண்டுவந்தார். கிராமத்தான் கிராமத்துலேயே வாழ முடியும்ங்கிற நிலைமையை ஏற்படுத்துனாரு. இன்றைக்கு மத்திய அரசாங்கமா இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமும் இருந்தாலும் சரி கிராம மக்களை மனதில் வெச்சுத்தான் எல்லாத் திட்டத்தையும் தீட்டுது. இவ்வளவு பெரிய நிதியை உள்ளாட்சி அமைப்புகளை நம்பி அப்படியே கொடுக்க முடியுமாங்கிறது சந்தேகம்தான். ஒரு கண்காணிப்பு அவசியம். அதனால, வாத்தியார், டாக்டர் நியமனம் மாதிரியான பெரிய அதிகாரங்களைவிட்டுட்டு, கொஞ்சம் கூடுதல் அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தரலாம். அதைக் கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து, தவறு நடந்தால் அந்த அதிகாரிகளைப் பொறுப்பாக்கினால் போதும். இது என்னோட தனிப்பட்ட கருத்து” என்றார்.

நாகநாதன்

‘ஒரு ஊராட்சித் தலைவருக்கு தெருவிளக்குப் போடுவதற்கான அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த ஊராட்சியின் கையில் பத்து பைசா கூட நிதி இல்லாமல் செய்துவிட்டோம் என்றால் அவரால் விளக்குப் போட முடியுமா?’ அதுதான் இன்று உள்ளாட்சிகளின் பிரச்சினை. சென்னை மாநகராட்சி தொடங்கி, புதிதாக உருவான சிவகாசி மாநகராட்சி வரையில் அத்தனையும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. இதை எப்படிச் சரிசெய்வது என்று முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதனிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டில் அத்தனை உள்ளாட்சி அமைப்புகளுமே நிதிச்சிக்கலில்தான் இருக்கின்றன. சென்னை மாநகராட்சிக்கே அதன் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம்தான் வரிவருவாய் மூலம் கிடைக்கிறது. மீதி 60 சதவீதம் கடன்தான். மற்ற மாநகராட்சிகளைக் கேட்கவே வேண்டாம்.

இந்தச் சூழலில், ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகள் மீது, குண்டு வீச்சையே நடத்திவிட்டது மத்திய அரசு. ஒரு நகரில் கல்யாண மண்டபம் இருந்தால், அதன் சாக்கடை அடைப்பை சரிசெய்வது உள்ளாட்சி. ஆனால், கல்யாண மண்டப வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டுபோய்விட்டார்கள். தியேட்டர்களுக்கான கேளிக்கை வரியும் ஜிஎஸ்டிக்குள் போய்விட்டது. தொழிற்சாலைகளும் அப்படித்தான். பிறகெப்படி உள்ளாட்சிகளுக்கு வருமானம் வரும்? ஆளுநர் கூட அரசு பங்களாவுக்கு இஷ்டப்படி வண்ணம் தீட்டிக்கொள்கிறார். ஆனால், பல உள்ளாட்சி அமைப்புகள் வெள்ளையடிக்கக்கூட காசில்லாமல் தவிக்கின்றன.

இப்படி வசூலிக்கிற வரியில் உள்ளாட்சிக்குரிய பங்கையும் அவர்கள் தருவதில்லை. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததைக் காரணம் காட்டி, சட்டப்படி தேர்தல் நடத்தாமல் நிதி தரமுடியாது என்று மத்திய அரசு சொல்லிவிட்டது. இப்போது அனைத்து உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுவிட்டது. எனவே, உள்ளாட்சிகளுக்கான நிதியை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்று நமது நிதியமைச்சர் பிடிஆர் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

பெரிய சிக்கல் என்னவென்றால், மத்திய அரசே நிதி ஆளுகையில் மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வேறு திட்டங்களுக்குத் தர வேண்டிய நிதியையே தராமல் இழுத்தடிக்கிறார்கள். சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மேம்பாலம் கட்டுவது போன்ற பணிகளுக்கு தமிழ்நாடு அரசே நிதி தந்தது. அதைப்போல மாநில அரசும், மத்திய அரசும் கைகொடுத்தால்தான் நிதிச் சிக்கல்கள் தீரும்” என்றார்.

க.பழனித்துரை

‘வெறும் நிதியும் அதிகாரமும் மட்டும் போதுமா, நேற்றுவரையில் ரியஸ் எஸ்டேட் தொழிலும், வேறு வேலைகளும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பொறுப்பான உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகச் செயல்பட்டுவிட முடியுமா?’ என்ற கேள்வியும் இருக்கிறது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு கோடி கோடியாய் நிதியும், அதை இஷ்டப்படி செலவு செய்வதற்கான அதிகாரமும் இருந்த மாநகராட்சிகள், அதை எப்படிச் செலவு செய்தன என்பதையும் இங்கே கணக்கில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற பேராசிரியரும், உள்ளாட்சி அமைப்புகள் குறித்து நூல்களை எழுதியவருமான க.பழனித்துரையிடம் கேட்டபோது, “தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு எவ்வளவு நிதியும், அதிகாரமும் கொடுத்தாலும் சரி, அதை சிறப்பாக ஏற்று நடத்துவற்கான ஆற்றலும், தகுதியும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இம்முறை நிறைய புதுமுகங்களும், பெண்களும் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். எனவே, அத்தனை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். முதல்வரே தன்னுடைய உரையில், ‘உள்ளாட்சி என்றால் சாதாரணமாக நினைச்சிடாதீங்க. நீங்க நினைச்சா ஒரு குட்டி குடியரசையே உருவாக்கலாம். நீங்கள் தவறு செய்தால் அது இந்த அரசைத்தான் பாதிக்கும்’ என்று சொன்னது உண்மைதான்.

நிறைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வெறுமனே நிர்வாகம் பண்ணுவதும், எப்படி ஒர்க் ஆர்டர் வாங்குவதும்தான் தங்கள் பணி என்று நினைக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளுக்குப் பொறுப்பெடுக்கிறவன்தான் தலைவன், தன்னை இழக்கிறவன்தான் தலைவன், 5 வருடம் காரில் வலம் வருவதும், பெஞ்சைத் தேய்ப்பதும் தலைவனின் வேலையல்ல. 5 வருடம் கழித்து மீண்டும் தேர்தல் வரும்போது, நான் இதை எல்லாம் செய்திருக்கிறேன் என்று மக்களிடம் போய்ப் பெருமையாகச் சொல்லும் நிலையில் இருக்க வேண்டும். எனவே, அத்தனை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், தலைவர்களுக்கும் நிபுணர்களைக்கொண்டு பயிற்சி அளிக்க வேண்டியது அரசின் கடமை.

கிராம ஊராட்சிகளின் அதிகாரம், தலைவர், உறுப்பினர்களின் கடமை குறித்து நிறைய புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஆனால், நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர்களின் அதிகாரம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதை அந்த உறுப்பினர்களுக்குத் தருவதோடு, பொதுமக்களுக்கும் தர வேண்டும். அப்போதுதான் நிர்வாகம் வெளிப்படையாக இருக்கும். கவுன்சிலர்களும் அத்துமீற மாட்டார்கள்” என்றார் அவர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த உள்ளாட்சித் துறை அமைச்சராகச் செயல்பட்டு, அதற்காக மத்திய அரசின் விருதைப் பெற்றவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக இருக்கிறார். மாநில சுயாட்சிக்கென முன்னாள் முதல்வர் கருணாநிதி தனி ஆணையமே அமைத்ததுபோல, உள்ளாட்சியின் அதிகாரம், நிதி ஆதாரத்துக்கென சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஏற்கெனவே, “உள்ளாட்சிப் பிரதிநிதிகளை கண்காணிப்பேன்” என்று சொன்ன அவர், இதையும் செய்தார் என்றால், 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE