பேர்சொல்ல ஒரு பேரூராட்சி: மக்கள் நாயகனான மா.சேகர்!

By கரு.முத்து

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், டி.டி.வி.தினகரனின் அமமுகவுக்கும் பேர் சொல்லிக்கொள்ள ஓரு பேரூராட்சி கிடைத்திருக்கிறது. தினகரன் பிரச்சாரத்துக்கே போகாத நிலையிலும், வேட்பாளர்களின் செலவுக்குக்கூட பணம் கொடுக்காதபோதும் 15 உறுப்பினர்களைக் கொண்ட தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியை 9 உறுப்பினர்கள் பலத்துடன் அமமுக கைப்பற்றியிருக்கிறது. தமிழகம் முழுக்க ஒட்டுமொத்தமாக திமுக அலை வீசிய நிலையில், இது எப்படி சாத்தியம் என்று கேட்டால், “மா.சேகரால்தான் சாத்தியம்” என்று பதில் சொல்கிறார்கள்.

தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக இருக்கிறார் இந்த மா.சேகர். இவரின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்குதான் ஒரத்தநாட்டை அமமுக கைப்பற்ற உதவியிருக்கிறது என்கிறார்கள். இதற்குமுன் இவரும் அதிமுகவில்தான் இருந்தார். ஒரத்தநாடு பகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இவரை சந்தித்துப் பேசமுடியும். தெரிந்தவர், தெரியாதவர் என்று அத்தனை பேரின் நல்லது கெட்டதுகளில் பாரபட்சம் பார்க்காமல் பங்கெடுத்துக் கொள்வார். அதனால், மக்களுக்கும் மா.சேகர் மீது நல்ல மதிப்பு இருக்கிறது.

ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுகவின் தஞ்சை மாவட்டச் செயலாளராக ஆகியபோது, உறவினரான சேகரும் அவர் கூடவே இருந்தார். வைத்திலிங்கத்துக்குப் பக்கபலமாக கட்சியில் செயலாற்றினார். அம்மா பேரவை தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

இந்நிலையில், 2014 மக்களவைத் தேர்தலில் தனக்கு தஞ்சை சீட் கேட்டு விண்ணப்பித்தார் சேகர். தகுதி அடிப்படையில் பார்த்தால், இவருக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. வைத்திலிங்கத்தின் ஆதரவாளராகவும் இருந்ததால், இவர்தான் வேட்பாளர் என்று எல்லோரும் முடிவே செய்திருந்தனர். ஆனால், மாவட்டச் செயலாளராகவும், கட்சியில் பலம் வாய்ந்தவராகவும் இருந்த வைத்திலிங்கம் தனது சுயலாபத்துக்காக, ரியல் எஸ்டேட் அதிபரான தஞ்சாவூர் பரசுராமனின் பெயரை சிபாரிசு செய்தார். அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றியும் பெற்றார்.

இதனால் மனம் வெறுத்துப்போனார் சேகர். தன்னுடைய ஊரைச் சேர்ந்தவரும், தனது உறவினருமான வைத்திலிங்கத்துக்காக இத்தனை ஆதரவாக இருந்தும் தன்னை விலக்கிவிட்டு, இன்னொருவரை தூக்கிப் பிடித்துவிட்டாரே என்ற ஆதங்கத்தில் வைத்தியை விட்டு விலகி, அவருக்கு எதிராகவே தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தார் சேகர். இந்நிலையில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிட்டார். இவரை ஜெயிக்க வைப்பதற்காக, அதிமுக தரப்பில் பெருந்தொகை கொடுத்து உதவினார்கள். ஆனாலும், வைத்தியால் கரைசேரமுடியாமல் போய், ஒரத்தநாட்டை திமுக வென்றது.

வைத்திலிங்கம்

சேகரின் ஆதரவாளர்கள் செய்த உள்ளடி வேலைகள்தான், வைத்திலிங்கம் தனது சொந்தத் தொகுதியிலேயே தோற்றுப் போனதற்கு முக்கியக் காரணம் என்று அப்போது செய்திகள் வெளியாகின. அந்த அளவுக்கு கட்சியின் அடிமட்டத் தொண்டனிடம் இறங்கிபோகக் கூடியவர் சேகர். அந்த விசுவாசத்தில், பெரும்பாலான அதிமுகவினரே வைத்திக்கு வாக்களிக்காமல் விட்டார்கள்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ‘அமமுக’ உதயமானது. இனி அதிமுகவில் இருந்து பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த சேகர், தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் இணைந்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், வைத்திலிங்கம் மீண்டும் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் சேகரே வேட்பாளராக நின்றார். ஆனால், 2016 தேர்தலின்போது நடந்த தவறுகளை எல்லாம் எச்சரிக்கையாக பார்த்து சரி செய்து கொண்டதால், இம்முறை வைத்திலிங்கமே வெற்றிபெற்றார்.

ஆனாலும் துவண்டுவிடாத சேகர், வைத்திலிங்கத்துக்கு எதிரான தனது தொடர் யுத்தத்தில் இந்தமுறை வென்றுவிட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் சொந்த ஊர்களை திமுக கைப்பற்றியது போல, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் ஊரை அமமுக கைப்பற்றி, அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

ஏற்கெனவே நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக தட்டிப் பறித்தது. அதனால், பேரூராட்சியையாவது அதிமுக வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வைத்திலிங்கம் விரும்பினார். அதற்காக இந்தத் தேர்தலில் கடுமையாக உழைத்தார். திமுகவும் சரியான நபர்களை இறக்கி களத்தில் வேலைபார்த்தது.

மா.சேகர்

ஆனால், இது உள்ளாட்சித் தேர்தல் என்பதால் சேகருக்கு இருக்கும் கீழ்மட்ட தொடர்புகளும், மக்கள் செல்வாக்கும் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் அமமுக வேட்பாளர்களை நிறுத்தினார் சேகர். அதில், அவரது மனைவி திருமங்கை உட்பட 9 பேர் வெற்றி பெற்று ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக வசமாக்கியுள்ளனர்.

வெற்றிக் களிப்பில் இருந்த மா.சேகரிடம் பேசினோம். ’’இந்த வெற்றி ஒன்றும் எனக்குப் புதிது இல்லை. ஏற்கெனவே 1996-ல் இங்கே எங்களுடைய ஆதரவாளர்கள் அதிகம் பேர் வெற்றிபெற்றிருந்தனர். அப்போது அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்த திமுக இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. அப்போது, யார் தலைவராக வேண்டும் என்று மக்கள் என்னைக் கேட்டார்கள். ஆனாலும் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த திமுககாரரையே தேர்ந்தெடுத்தோம். அதன்பிறகு, நான் 5 வருடமும், எனது மனைவி 10 வருடங்களும் தொடர்ச்சியாகப் பேரூராட்சி தலைவராக பணியாற்றியிருக்கிறோம். என் மனைவி தலைவராக இருந்த போது, நான் துணைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன். அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் எங்களை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

மக்களுக்கு எங்களைப்பற்றி நன்றாகவே தெரியும். அதனால் எப்போதும் எங்களுக்கோ, நாங்கள் சுட்டிக் காட்டுகிறவர்களுக்கோ தான் ஒரத்தநாடு பேரூராட்சி மக்கள் வாக்களிப்பார்கள். இப்போதும் அப்படியே செய்திருக்கிறார்கள்” என்றார்.

“அப்படியானால் இதை உங்களின் தனிப்பட்ட செல்வாக்கால் கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்ட போது, “அப்படிச் சொல்லிவிட முடியாது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டு, கட்சி சார்பில், கட்சி சின்னத்தில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். அதனால் இது அமமுகவின் வெற்றிதான்” என்றார்.

“இந்த வெற்றிக்குக் காரணம், உங்களது பழைய நண்பர் வைத்திலிங்கத்தின் மீதான அதிருப்தியா அல்லது ஆளும்கட்சி மீதான வெறுப்பா?” என்று கேட்டபோது, “அதெல்லாம் கிடையாது. மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நல்ல அபிப்ராயமே இந்த வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலிலேயே மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். ஆனால், அதிமுக தரப்பில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் விளையாடியதால் முடிவு மாறியது. இப்போது நாங்கள்தான் தேவையென்று மக்கள் தீர்க்கமாக முடிவெடுத்து வாக்களித்திருக்கிறார்கள்” என்றார் சேகர்.

நிறைவாக, “இந்தத் தேர்தலில் குறைவான இடங்களில் போட்டியிட்ட அமமுக மிகச் சொற்பமான இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் எதிர்பார்த்த இலக்கை எட்டமுடியவில்லைை. இப்படியே போனால் அமமுகவின் எதிர்காலம் என்னவாகும்?” என்று கேட்டதற்கு, “இன்னும் இரண்டு, மூன்று மாதம் பொறுங்கள். மிக நல்ல செய்தி வரும். எங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று பூடமாகச் சொல்லிவிட்டு, பூரிப்புடன் சிரித்தார் செயல்வீரர் சேகர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE