பாஜகவை தள்ளிவைத்தது அதிமுகவுக்கு அனுகூலமா?

By கரு.முத்து

அதிமுகவை விடாமல் தொங்கிக் கொண்டிருக்காமல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக தனக்கென ஓரிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. “பாஜக தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. எனவே, தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளித்து, தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று அப்போது சொன்ன அண்ணாமலை, ஓரளவுக்கு அதை சாதித்தும் காட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அண்ணாமலை

உண்மையிலேயே அதிமுகவைப் பிரிந்து தனித்து களம் கண்ட பாஜகவுக்கு, இந்தத் தேர்தலில் தனித்த பலன் கிடைத்திருக்கிறதா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கேட்டபோது, “பாஜகவும் அதிமுகவும் தனித்துப் போட்டியிட்டதால் அவரவர்களுக்குரிய பயன்கள் கிடைத்திருக்கின்றன. ஒன்றாக போட்டியிட்டால் அதிக இடங்களை பிடித்திருக்க முடியுமா என்றால், அதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், இந்தத் தேர்தலில் திமுக பணத்தை வாரி இறைத்திருக்கிறது. திமுக ஆட்சி மீது மக்கள் கோபத்தில் இருந்தார்கள். பொங்கலுக்கு பணம் கொடுக்கவில்லை, பொங்கல் பரிசுப் பொருட்கள் சரியில்லை, குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 தராதது என்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஆட்சிக்கு எதிரான கோபம் மக்களிடம் இருந்தது. அதைப் புரிந்துகொண்ட திமுக முழுவீச்சில் பணத்தை இறக்கியது. அதன் பயனை அவர்கள் அறுவடை செய்திருக்கிறார்கள் அவ்வளவுதான்” என்றார்.

ஓ.எஸ்.மணியன்

21 மாநகராட்சிகளில் மொத்தமுள்ள 1,374 வார்டுகளில் 22 வார்டுகளையும், 138 நகராட்சிகளில் உள்ள 3,843 வார்டுகளில் 56 வார்டுகளையும், 489 பேரூராட்சிகளில் உள்ள 7,620 வார்டுகளில் 230 வார்டுகளையும் பாஜக பெற்றிருப்பது எண்ணிக்கை அளவில் குறைவானதாகத் தெரிந்தாலும் உண்மையில் இது அந்தக் கட்சிக்கு வளர்ச்சிப் பாதைதான்.

அதிலும், சென்னை மாநகராட்சியில் போட்டியிட்ட பாஜகவின் உமா ஆனந்தன் 2 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்று வெற்றிபெற்றிருப்பதும், பத்மநாபபுரம் பேரூராட்சியை பாஜக கைப்பற்றும் அளவுக்கு வந்திருப்பதும் உண்மையில் பாஜக, தமிழகத்தில் வளரத் தொடங்கிவிட்டதையே உணர்த்துகிறது. அதனால் தான் ’நாங்க வந்துட்டோம்னு சொல்லு’ என்று பாஜகவினர், தங்களது உள்ளாட்சி வெற்றியை ட்ரெண்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையும், “நாங்கள் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துவிட்டோம்” என்று உற்சாகத்தில் இருக்கிறார்.

பாஜகவினரின் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க, விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி 6-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோ.நிரோஷா, ஒரு ஓட்டுகூட பெறாமல் தோற்றிருக்கிறார். பவானிசாகர் பேரூராட்சியில் 11-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன், ஒரேயொரு ஓட்டு மட்டும் பெற்று தோல்வியடைந்திருக்கிறார். பல இடங்களில் பாஜகவினருக்கு வைப்புத்தொகை பறிபோயிருக்கிறது. இதெல்லாம் மத்தியில் அசுரபலத்துடன் ஆட்சி செய்யும் தேசியக் கட்சியான பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் இன்னமும் களப்பணி போதவில்லை என்பதையே காட்டுகிறது.

ஆனாலும் தமிழகத்தில் சற்றேறக்குறைய 300 இடங்களில் தாமரை மலர்ந்திருப்பதும், திமுக, அதிமுக, காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்றிருப்பதும் கவனம் கொள்ளத்தக்கது. இதுவே அண்ணாமலை விரும்பியதாகவும் இருக்கலாம். “பிரதமர் மோடி மீதான அன்பால், இதுவரை வெல்லாத இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது” என்று இந்த வெற்றிகுறித்து பெருமிதப்பட்டிருக்கிறார் அண்ணாமலை.

நாராயணன் திருப்பதி

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “பிரிந்து நின்றதால் யாருக்கு ஆதாயம் என்று பார்ப்பதைவிட எங்கள் கட்சிக்கு இது வளர்ச்சி தரக்கூடியதாக அமைந்திருக்கிறது என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் தங்கள் பகுதியில் தாமரை போட்டியிட வேண்டும், தங்கள் பகுதியில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர்கள் கடுமையான களப்பணி செய்து வந்த நிலையில், அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் கடமை பாஜகவுக்கு உண்டு. அதனால் தனித்து போட்டியிட்டது பாஜக. அதற்கான பலன் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக அதிக வாக்குகளை வாங்கியதோடு கணிசமான வெற்றியையும் பெற்றிருக்கிறது. மற்றவர்கள் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்றிருக்கிறோம். இதன் மூலம் தொண்டர்கள் மிகுந்த உற்சாகமும், தெம்பும் அடைந்திருக்கிறார்கள். எங்களுக்கு பெரும் நம்பிக்கையை இந்த தேர்தல் விதைத்திருக்கிறது” என்றார்.

இதற்கு முந்தைய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் வெறும் 8 ஒன்றியக்குழு உறுப்பினர்களை மட்டுமே பாஜக பெற்றது. ஆனால், தனித்து நின்ற இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளைவிட பாஜக அதிக இடங்களைப் பிடித்திருக்கிறது. இதை வைத்து, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டாலுமே, தனக்கான தொகுதிப் பங்கீட்டுக் கணக்கை பாஜக மாற்றி அமைக்கலாம்; கடந்த தேர்தலைப் போல வெறும் 5 தொகுதிகளை வாங்கிக் கொண்டு அமைதியாகிவிடும் நிலையில் அது இருக்காது என்பது தெளிவு.

மு.க.ஸ்டாலின்

பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட தேர்தல்களைவிட, பாஜக இல்லாமல் போட்டியிட்ட இந்த தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெற்றிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத்தேர்தல் என அனைத்திலுமே பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக மோசமான தோல்வியைத்தான் சந்தித்தது. அதிலும், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகமோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் அப்படியில்லாமல் நிலைமை மாறியிருக்கிறது. மாநகராட்சிகளில் 164 இடங்களையும், நகராட்சிகளில் 638 இடங்களையும், பேரூராட்சிகளில் 1,206 இடங்களையும் கைப்பற்றி உள்ளது அதிமுக. ஆளும்கட்சியின் அதிகார வரம்புகளை மீறி பெற்றிருக்கும் இந்தவெற்றியானது, அதிமுகவுக்கு இழந்துபோன தெம்பை மீட்டுத்தந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி

பாஜகவை கூட்டணியிலிருந்து ஒதுக்கி வைத்ததால்தான் இந்த அளவுக்கு அதிமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்கிறார்கள், அதன் தொண்டர்கள். தனித்துக் களமிறங்கியதன் பலனை அதிமுக இந்தத் தேர்தலில் அறுவடை செய்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன ஆகுமோ என்ற பயம், அதிமுக தொண்டர்களிடம் இருக்கிறது. தொண்டர்களின் அச்சம் இப்படி இருந்தாலும் பாஜக எப்படி அதிமுகவை விட்டுவிடத் தயாராய் இல்லையோ, அதேபோல எடப்பாடி பழனிசாமி பாஜகவை விட்டுவிடத் தயாராகயில்லை என்பதே உண்மை.

பாஜகவின் தயவை வைத்துக்கொண்டுதான் ஓபிஎஸ் அவ்வப்போது கட்சிக்குள் பிரச்சினை கிளப்புகிறார் என்று நம்பும் எடப்பாடி, அதைச் சமாளிக்க பாஜகவின் தீவிர ஆதரவாளராக தானும் மாறிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாஜகவின் தயவிருந்ததால் மட்டுமே, சசிகலாவை ஓரம்கட்டி வைக்க முடிந்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கும் எடப்பாடி, கட்சிக்குள் தனது ஆளுமையை இன்னும் ஸ்திரப்படுத்த வேண்டுமானால் அதற்கு பாஜகவின் தயவும் தேவை என நினைக்கிறார். அதனால், பாஜகவின் கட்டளைகளுக்கு காத்திருக்கும் மனநிலையில் அவர் இருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தங்கள் கட்சியின் கொள்கைகளைப் பேச பாஜகவே தயங்கினாலும், பல விஷயங்களில் பாஜகவின் திட்டங்களை அந்தக் கட்சியினரைவிட அதிகமாகத் தூக்கிப் பிடிக்கிறார் எடப்பாடி. ஒரேநாடு, ஒரே தேர்தல் என்ற தாரக மந்திரத்தை இங்கே அண்ணாமலையோ, எச்.ராஜாவோ முழங்கவில்லை. எடப்பாடிதான் மேடைதோறும் முழங்கினார். தேர்தலுக்கு முன்னால் 2 கட்சிகளும் பிரிந்து தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்தபோது, “உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் அதிக தொகுதிகள் போட்டியிட்டு, அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.. அதனால்தான் பாஜக தனித்து போட்டியிடுகிறது” என்று பாஜக தரப்பு விளக்கத்தை பழனிசாமியே சொன்னார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியபோது அதை ஆதரிக்கும் வகையில் பழனிசாமி பேசியதும், அதற்காக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டபோது, அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அவர் முந்திக்கொண்டு முதலில் அறிவித்ததையும் வைத்துப் பார்த்தால் பாஜகவுக்கு எது பயன்தருமோ, எதைச் செய்தால் பாஜக மகிழ்ச்சி அடையுமோ அதைத்தான் அவர் திட்டமிட்டு செய்து வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வம்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டி என்று பாஜக அறிவித்ததுமே, “இனி பாஜகவுடன் கூட்டணியில்லை என்று அறிவித்துவிடுங்கள்” என்று அதிமுக முன்னோடிகள் பழனிசாமியிடம் வற்புறுத்தினார்கள். ஆனால், அவர் அதற்கு செவிமடுக்கவில்லை. எப்படிப் பார்த்தாலும் இன்னும் இரண்டாண்டு காலம் பாஜக தான் மத்தியில் ஆட்சியில் இருக்கப் போகிறது. அதுவரையாவது அவர்கள் தயவு நமக்கு வேண்டும். ஒரேயடியாக பாஜகவைவிட்டு விலகிவிட்டால், திமுக இங்கே நம்மை ஒருவழி செய்துவிடும் என்பது பழனிசாமிக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர், கட்சியினர் கொடுத்த அழுத்தத்துக்கு உடன்படவில்லை.

பழனிசாமியின் தனிப்பட்ட கணக்கு இப்படி இருந்தாலும் பாஜகவை ஒதுக்கிவைத்துவிட்டு சந்தித்த தேர்தலில், அதிமுகவுக்கு ஆதாயம் கிடைத்திருப்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதே நிலை தொடர்ந்தால் என்ன என்பதே, இப்போது அதிமுக அடிமட்டத் தொண்டர்களின் ஏகோபித்த கேள்வியாக இருக்கிறது. ஆனால், அதற்கு பழனிசாமியும் பன்னீர்செல்வமும் உடன்பட வேண்டுமே?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE