செயல் புயல் செந்தில் பாலாஜி செய்த ஜாலம்

By டி. கார்த்திக்

‘கோவை அதிமுகவின் கோட்டை’ என்ற பெருமையை, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுக்குநூறாக உடைத்திருக்கிறது திமுக. உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலை தமிழ்நாட்டில் இருந்தாலும், கோவையில் திமுக பெற்ற வெற்றி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிமுகவும் பாஜகவும் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பகுதியில், மாயாஜால வித்தையைக் காட்டி திமுகவை வெற்றி பெற வைத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. எப்படி சாத்தியமானது இது?

துடைத்தகற்றப்பட்ட தோல்வி பிம்பம்

கோவையில் மொத்தம் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 2006 தேர்தலில் கோவை கிழக்கு, வால்பாறை என 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது திமுக கூட்டணி. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஓரிடத்திலும் வெல்லாத திமுக கூட்டணி, 2016-ல் ஓரிடத்தில் (சிங்காநல்லூர்) மட்டும் வென்றது. தொடர் தோல்விகளுக்கு திமுக முற்றுப்புள்ளி வைக்கும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தத் தேர்தலில் வென்று கோட்டையைப் பிடித்தபோதும், கோவையில் ஒன்றில்கூட திமுக கூட்டணியால் வெல்ல முடியாமல் போனது.

அந்தத் தேர்தல் மூலம், சென்னை திமுகவின் கோட்டை என்பதைப் போல, கோவை அதிமுகவின் கோட்டை என்ற பெயரும் நிலைபெற்றது. இந்த நிலையை எப்படியும் மாற்றியாக வேண்டும் என்ற முனைப்பில், ஆட்சிப் பொறுப்பேற்ற முதலே கங்கணம் கட்டிக்கொண்டிருந்தது திமுக. தற்போது, சகலத்தையும் அரங்கேற்றி கோவையில் சாதித்தும் காட்டியிருக்கிறது திமுக. கப்பலின் ஆணிக்குக் கூட சேதாரமின்றி கரைசேர மாலுமி உதவுவது போல, திமுகவைக் கோவையில் வெற்றிகரமாகக் கரை சேர்த்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

செய்துகாட்டிய செந்தில் பாலாஜி

வழக்கமாக ஒரு மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனால், அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பக்கத்து மாவட்டத்தையும் கவனித்துக்கொள்வார். கோவைக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதும், நீலகிரியைச் சேர்ந்த ராமச்சந்திரன் அல்லது திருப்பூரைச் சேர்ந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோரில் ஒருவர் கோவையையும் கவனித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோவை மாவட்டத்துக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்கரபாணியை பொறுப்பு அமைச்சராக திமுக தலைமை நியமித்தது.

கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த அந்த நேரத்தில், கோவை புறக்கணிக்கப்படுகிறது என்ற பிரச்சாரத்தை அதிமுக கையில் எடுத்தது. அதிமுகவின் பிரச்சாரங்களை அதிரடியாக முறியடிக்கவும் கோவை என்பது எஸ்.பி.வேலுமணியின் கோட்டை என்ற பிம்பத்தை உடைக்கவும், அதிமுகவிலிருந்து வந்து அமைச்சரான செந்தில் பாலாஜி சரியாக இருப்பார் என்று திமுக தலைமை நினைத்தது. அதோடு, செந்தில் பாலாஜி கோவையில் உள்ள பெரும்பான்மையான சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை ‘டிக்’ அடித்து கோவைக்கு அனுப்பினார் ஸ்டாலின். அதுவரை செந்தில் பாலாஜி சேலம் மாவட்டப் பொறுப்பு அமைச்சராகத்தான் இருந்தார்.

மக்கள் சபை, கரூர் படை...

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்பதை மனதில் கொண்டுதான், கோவையில் செந்தில் பாலாஜியை திமுக தலைமை களமிறக்கியது. அதற்கேற்ப, வந்தவுடனே செந்தில் பாலாஜி ‘மக்கள் சபை’ என்ற பெயரில் கோவையில் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். கோவையில் இருந்தபோதெல்லாம் மக்கள் சபையை நடத்தி கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதை நிவர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டினார். மேலும், கோவை கொடீசியா அருகே வீடு பார்த்து அங்கேயே தங்க ஆரம்பித்தார். அடுத்து அவர் செய்த இன்னொரு காரியம், கரூரிலிருந்து தனக்கு விசுவாசமாகவும் நண்பர்களாகவும் உள்ள 300 பேரைத் தயார் செய்து கோவைக்கு வரவழைத்தது. கோவையில் ஒவ்வொரு வார்டிலும் ஒருவர் என அவர்களையும் அங்கேயே வீடு பிடித்து தங்க வைத்தார்.

இந்த 300 பேரும் பெரும்பாலும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவுக்கே சம்பந்தம் இல்லாத, பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் குழு வகுத்த திட்டங்களையும் பிரச்சாரங்களையும் முன்னெடுத்தது போல, செந்தில் பாலாஜியின் கரூர் குழுதான் அனைத்தையும் வழி நடத்தியது. சுருக்கமாகச் சொல்வதென்றால், கோவை திமுக கடந்த சில மாதங்களாக இவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

சூட்சுமம் என்ன?

இதுதொடர்பாக அந்தக் குழுவில் இருந்த செந்தில்வேல் நம்மிடம் பேசினார். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே கோவையில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்து வார்டுகளிலும் யாரை நியமித்தால் வெற்றி பெறுவார் என்று 300 பேர் கொண்ட குழு சர்வே செய்து, 3 பேர் கொண்ட பட்டியலை ஒவ்வொரு வார்டுக்கும் வழங்கியது. கோவையில் திமுக நிர்வாகிகளான சிங்காநல்லூர் கார்த்திக், கார்த்திகேய சிவசேனாபதி, மகேந்திரன் போன்றவர்கள் இருந்தாலும், அவர்கள் பரிந்துரைகளை வழங்கினாலும், செந்தில் பாலாஜி எடுக்கும் முடிவே இறுதி என்ற அளவுக்கு கோவையில் செந்தில் பாலாஜிக்கு அதிகாரங்களை திமுக தலைமை வழங்கியிருந்தது.

அதன்படி கோவையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர்களில் 95 சதவீதம் பேர் அவரது குழு கொடுத்த பட்டியலில் இருந்தவர்கள்தான். தேர்தல் நேரத்திலும், இந்த 300 பேர் கொண்ட டீம் மைக்ரோ லெவலில் வாக்காளர்களை அணுகி பிரச்சாரம் செய்தது. இவர்களின்கீழ் செயல்பட்டவர்களுக்கு 50 வீடுகள் வீதம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பகுதிகளிலேயே தங்கி வாக்காளர்களை உறவு முறை வைத்து அழைப்பது, ‘திமுகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்’ என்று தினமும் திண்ணை பாணி பிரச்சாரத்தையும் செய்தார்கள். அதெல்லாம் திமுக வெற்றிக்குக் கைகொடுத்தது” என்கிறார் செந்தில்வேல்.

பணப் பட்டுவாடா முதல் பரிசுக் கூப்பன் வரை!

செந்தில் பாலாஜியின் பாய்ச்சல்களைப் பார்த்து கோவை திமுகவினரே அரண்டு போனார்கள். இதனால், செந்தில் பாலாஜிக்கு எதிர்ப்பு என்ற செய்திகள் அவ்வப்போது எழச் செய்தன. ஆனால், அதையெல்லாம் தலைமை மூலம் அவர் உடனடியாக ‘ஆஃப்’ செய்தார். மேலும், திருமங்கலம் ஃபார்முலாவையே கோவை விஞ்சிவிட்டது என்று சொல்லுமளவுக்கு பணம் பாதாளத்தையும் தாண்டி இந்தத் தேர்தலில் பாய்ந்திருக்கிறது என்கிறார்கள். இந்தப் பணப் பட்டுவாடாவையும் உள்ளூர் திமுகவினரை வைத்து வழங்காமல், செந்தில் பாலாஜி குழுவே செவ்வனே செய்தது என்கிறார்கள் கோவை அதிமுகவினர்.

இதுதொடர்பாக, கோவையில் உள்ள அதிமுகவினர் சிலரிடம் பேசினோம். “இந்தத் தேர்தலுக்கு ஹாட் பாக்ஸ், கொலுசு, ரொக்கம் கொடுத்தது மட்டும்தான் வெளியில் தெரிந்தது. ஆனால், 6 மாதங்களுக்கு கேபிள் இலவசம், பரிசுக் கூப்பன்கள் என இன்னும் பலவற்றை வாக்காளர்களுக்கு திமுகவினர் வாரி இறைத்தனர். அதிமுகவில் பண விநியோகம் செய்தவர்களை முன்கூட்டியே யார் யார் எனத் தெரிந்து அவர்களையெல்லாம் முடக்கினார்கள். அதனால், அதிமுகவால் சீராகப் பண விநியோகம் செய்ய முடியாமல் போனது. ஆனால், சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி 100 சதவீதம் கோவை முழுவதும் பண விநியோகம் செய்தது திமுக” என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கோவை மாநகராட்சியில், ஒரு வார்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் தண்ணீராய் செலவழிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அரண்டுபோன அறிவாலயம்

இவ்வளவுக்கு மத்தியிலும் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்பதை அறிய, செந்தில் பாலாஜி வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பையும் நடத்திக் காட்டினார். அதில், கோவை மாநகராட்சியில் 80 வார்டுகள் வரை திமுக வெல்லும் எனத் தெரியவந்த பிறகே செந்தில் பாலாஜி நிம்மதியடைந்தாராம். ஒட்டுமொத்தமாகக் கோவையில் 90 சதவீத வெற்றி கிடைக்கலாம் என திமுக எதிர்பார்த்திருக்கிறது. ஆனால், ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சி என அனைத்தையும் திமுக கூட்டணியே கொத்தாக அள்ளி வெற்றிக் கொடியை உயரப் பறக்க விட்டிருக்கிறது.

கட்சித் தலைமை இட்ட உத்தரவை நிறைவேற்றிவிட்டோம் என்ற நிம்மதியில் செந்தில் பாலாஜி இருந்தாலும், அவருடைய தேர்தல் வியூகங்களையும் அதிரடிகளையும் கண்டு மகிழ்ச்சியைத் தாண்டி திமுக தலைமை மிரட்சியிலும் இருப்பதாக அறிவாலயத்தில் தகவல்கள் அலைபாய்கின்றன. என்றாலும், செந்தில் பாலாஜியின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் கொங்கு மண்டல அளவில் அவருக்குப் புதிய பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் அறிவாலயத்தில் கசிகின்றன.

செந்தில் பாலாஜியின் இந்த தேர்தல் வியூகங்களை தமிழகம் முழுக்க விசாலப்படுத்தினால், அடுத்தடுத்து வரும் தேர்தல் களிலும் திமுகவை எதிர்கொள்வது அதிமுகவுக்கு நிச்சயம் பெரும் சவாலாகத்தான் இருக்கும்!

பெட்டிச் செய்தி

ஜெயக்குமார் கைது - வெளியில் வராத வேலுமணி!

இந்தத் தேர்தலில் எஸ்.பி. வேலுமணியின் பிம்பத்தை உடைக்கும் வேலையையும் திமுக செய்து முடித்திருக்கிறது. குறிப்பாக, தேர்தலுக்கு முந்தைய நாள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் நடத்திய போராட்டத்தையும் திமுக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. வேலுமணியைக் குண்டுக்கட்டாக போலீஸார் கைது செய்தவுடன், அவர் அமைச்சராக இருந்தபோது போலீஸார் சல்யூட் அடித்த படத்தையும் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி சென்ற படத்தையும் இணைத்து சமூக ஊடகங்களில் திமுக ஐ.டி விங் உலவவிட்டது. இது வேலுமணியின் பிம்பத்தை உடைக்க வைத்ததோடு, அவர்களால் தற்போது எதுவும் செய்ய முடியாது என்ற தோற்றத்தையும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

படம்: மனோகரன்

இதேபோல, கோவையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த 200-க்கும் மேற்பட்டவர்களை வேலுமணி தயார் செய்து வைத்திருந்ததாகவும், அதை உணர்ந்துகொண்ட செந்தில் பாலாஜி, ஜெயக்குமாரை சென்னையில் கைது செய்வதன்மூலம் கோவையில் வேலுமணியை முடக்கிப்போடலாம் என்ற யோசனையை மேலிடத்துக்குச் சொல்லி, தலைநகரில் அதை நடத்திக்காட்டியதாகவும் உடன்பிறப்புகள் சொல்கிறார்கள். ஜெயக்குமார் கைதால், வாக்கு எண்ணிக்கை அன்று வேலுமணி வீட்டைவிட்டே வெளியில் வரவில்லையாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE