இனியும் அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை வேண்டுமா?

By கே.எஸ்.கிருத்திக்

“அம்மா சிலைக்கு மாத்திரம் ஒரு நிமிசம் உசுரு வந்துருந்தா இவங்க ரெண்டு பேரையும் கண்ணாேலயே பொசுக்கிருப்பாங்க!” - ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக தலைமையகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாலையணிவித்த காட்சியை டிவியில் பார்த்துவிட்டு, மதுரை அதிமுக தொண்டர் ஒருவர் கோபத்தோடு சொன்ன வார்த்தைகள் இவை.

“தமிழ்நாட்டுல ஆட்சி, டெல்லியில 50 எம்பிக்கள், கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி தொண்டர்கள் என்று அதிமுகவை வலுவாக விட்டுச்சென்றிருந்தார் ஜெயலலிதா. ஆனா இவங்களோ, ஆட்சியையும் இழந்து, எம்பிக்களையும் இழந்து, உள்ளாட்சித் தேர்தல்லேயும் மிக மோசமா தோத்துட்டு, எந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டு அம்மா சிலைக்கு மாலை அணிவிக்க வர்றாங்க?” என்று அந்தத் தொண்டர் கேட்பதும் சரிதானே?

அதிமுக செய்த தவறுகள் என்ன?

அதிமுகவின் மிகப்பெரிய தலைவலி இரட்டைத் தலைமை. ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கட்சியில், இன்று ஆளாளுக்கு நாட்டாமை செய்வதற்குக் காரணமே இந்த இரட்டைத் தலைமைதான். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஈபிஎஸ் செய்த சமரசம், அவருக்கே நிரந்தரத் தலைவலியாகிவிட்டது. மறுபடியும் தன்னை வலிமைப்படுத்திக்கொள்ள ஈபிஎஸ் முயற்சிக்கும்போதெல்லாம், வம்பாக சண்டைக்கு இழுத்தார் ஓபிஎஸ். பிறகு, இருவரும் திரைமறைவில் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, அண்ணன் தம்பி என்று கட்டிப் பிடிப்பார்கள். மறுபடியும் தகராறு, மறுபடியும் சமரசம், மறுபடியும் கட்டிப்பிடி வைத்தியம், மீண்டும் தகராறு, சமரசம், கட்டிப்பிடி வைத்தியம் என்று தொடர்கிற நாடகத்தைப் பார்த்து தொண்டர்கள் மட்டுமின்றி, மக்களும் வெறுத்துப்போய்விட்டார்கள். விளைவு, நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது அதிமுக.

“என் வாழ்நாளில் இன்னொரு முறை இந்தத் தவறைச் செய்யவே மாட்டேன்” என்று ஜெயலலிதா ஒரு விஷயத்தைச் சொன்னார் என்றால், அது பாஜகவுடனான கூட்டணி பற்றித்தான். அந்தத் தவறை ஜெயலலிதா மறைந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே செய்தார்கள் ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும். தங்கள் சுயலாபத்துக்காக, பதவியைத் தக்கவைப்பதற்காக இவர்கள் செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறு அது.

பதவி சுகத்துக்காக சிறுபான்மை வாக்கு வங்கியை பலிகொடுத்தார் ஈபிஎஸ். ஒருகட்டத்தில் தவறை உணர்ந்து, பாஜகவை வெளியேற்ற அவர் முற்பட்டது உண்மைதான். மக்களவைத் தேர்தலில் வெறும் 5 சீட் கொடுத்தால் ரோஷப்பட்டு வெளியேறிவிடுவார்கள் என்று நினைத்தார் ஈபிஎஸ். ஆனால், அப்போதும் காலைச் சுற்றிய பாம்பாகக் கிடந்தது பாஜக. இவர்கள் அடித்த கொள்ளை காரணமாக, சட்டப்பேரவைத் தேர்தலிலோ பாஜக கழுத்தைச் சுற்றிய பாம்பாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக சொன்னாலும், சிறுபான்மையின மக்கள் பெருவாரியான இடங்களில் அதிமுகவை ஒதுக்கியே வைத்தார்கள். ஆக, இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் கதையாக, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகிவிட்டது பாஜக.

ஓபிஎஸ், மோடி, ஈபிஎஸ்

மீள வழியே இல்லையா?

வரலாற்றில் அதிமுக இதைவிட மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 1996 பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவே தோற்றுப்போன வரலாறு உண்டு. ஆனால், இரண்டே ஆண்டில் (1998 மக்களவை) கூட்டணி அமைத்து 30 எம்பிக்களை பிடித்ததுடன், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் (2001) ஆட்சியையும் பிடித்த கட்சி அதிமுக. எனவே, அதிமுக நினைத்தால் மீண்டெழ முடியும்.

சட்டப்பேரவையிலும், உள்ளாட்சி மன்றத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற திமுகவுக்கு நிர்வாகப் பணியும், கட்சியினரை கட்டுக்குள் வைக்கும் பணியும் பெருஞ்சுமையாக இருக்கும். அதிமுகவுக்கோ இனி எந்தப் பொறுப்பும் இல்லை. வார்டு பிரச்சினையில் இருந்து மாநிலப் பிரச்சினை வரையில் எதை வேண்டுமானாலும் அரசியலாக்கலாம். இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அரசியலைச் சரியாகச் செய்யாவிட்டால், பூமராங் போல தன்னையே தாக்கும். உதாரணம், பாஜகவுடனான கூட்டணி உறவு முறிந்துவிட்ட பிறகும்கூட, சட்டப்பேரவையில் கூட்டணி அமையலாம் என்று ஈபிஎஸ் சொன்னது தேவையில்லாத ஆணி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பேசியது, அந்த ஆணியைப் பிடுங்கி தன்னுடைய கண்ணிலேயே குத்திக்கொண்டதற்கு ஒப்பான சம்பவம்.

ஒற்றைத் தலைமை

அதிமுக உடனே எடுக்க வேண்டிய முடிவு, வலுவான ஒற்றைத் தலைமை. அந்தப் பொறுப்புக்கு சற்றும் பொருத்தமில்லாவர் ஓபிஎஸ் என்பது, அவரது மகனுக்கே தெரியும். எனவே, இனியும் ஈவிரக்கம் பார்க்காமல், ஓபிஎஸ்சை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரது மகன்களுக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுத்தாவது, இதற்கு அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டும்.

அப்படியானால் சசிகலா? என்று சிலர் கேட்கக்கூடும். தலைமைப் பொறுப்புக்கு சசிகலா என்ற பேச்சையே எடுக்கக் கூடாது. அவர் காலாவதியான அரசியல்வாதி. அவரது பாணி அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை. இன்னொன்று, சசிகலாவுக்கு கட்சிக்குள் இடம் கொடுத்தால், மீண்டும் ஒரு கூட்டம் அதிமுகவுக்குள் அதிகாரம் செய்யத் தொடங்கிவிடும்.

சில குறைகள் இருந்தாலும், அதிமுகவின் ஒற்றைத் தலைமை பொறுப்புக்கு ஈபிஎஸ்சே பொருத்தமானவர். இதை திமுகவினர் ரசிக்கவே மாட்டார்கள். அதிமுக பலவீனமடைய வேண்டும் என்றே திமுக விரும்பும். சசிகலாவாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடந்தபோது ஓபிஎஸ்சை ஆதரித்த திமுகவினர், சசிகலாவா, ஈபிஎஸ்சா என்று வந்தால் சசிகலாவையே ஆதரிப்பார்கள். அதேநேரம் சசிகலா தலைவியான அடுத்த நிமிடமே, அவருக்கு எதிராக கம்பு சுற்றி அவரை காலிசெய்யும் வித்தையும் திமுகவினருக்குத் தெரியும். எனவே, அதிமுகவுக்கு இப்போது தேவை ஈபிஎஸ் வழிநடத்தும் ஒற்றைத் தலைமை தான்.

ஈபிஎஸ்

முதல் எதிர்வினை

2011 - 16 ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக தேமுதிக இருந்தாலும், திமுகவே களத்தில் நின்றது. அதுபோல இப்போது, திமுக அரசு என்ன தவறு செய்கிறது என்று கண்கொத்திப் பாம்பாக கவனித்து குறைசொல்வதையும், போராட்டம் நடத்துவதையும் முழுநேர வேலையாகச் செய்கிறது பாஜக. இளைஞரான அண்ணாமலையும் ஒரு போலீஸ்காரரைப் போல திமுகவை சதா கண்காணிக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரான ஈபிஎஸ்சுக்கோ முதல்வராக இருந்தபோது ஆலோசனை சொன்னது போலவே, இப்போதும் வெளியில் இருந்து சிலர் யோசனை சொல்ல வேண்டியதிருக்கிறது. அதிலும் சில நேரங்களில் ஓபிஎஸ் முந்திக்கொள்கிறார். பிறரிடம் யோசனை கேட்பதில் தவறேதும் இல்லை. ஆனால், முடிவுகளை தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தான் எடுக்க வேண்டும். இதுதான் கருணாநிதி பாணி. அதுபோல, முதல்வரான புதிதில் தன்னை வழிநடத்தும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது போல், இப்போது கட்சியில் இருக்கும் அறிவாளிகளிடம் வெட்கத்தைவிட்டு ஈபிஎஸ் ஆலோசனை கேட்கலாம். அதற்காகவே ஒரு குழுவை அமைத்து வழிகாட்டச் சொல்லலாம்.

பயம்கொள்ளல் ஆகாது...

ஆடு திருடிய வடிவேலு குறித்து பஞ்சாயத்தில் பிராது கொடுக்கவந்து, “பயத்தில் ஆடு களவு போன மாதிரி கனவு கண்டேன்” என்பாரே ஒரு பயந்தாங்கொள்ளி... அப்படித்தான் இருக்கிறார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும். ஏதாவது உள்ளூர்ப் பிரச்சினையோ, ஊழல் பிரச்சினையோ பற்றி பேச வாயெடுக்கிறார்கள். பிறகு, தங்கள் மடியில் இருக்கும் கனம் அவர்களைத் தடுமாறச் செய்கிறது. எங்கே தங்களையும் உள்ளே பிடித்துப்போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில், “ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்” என்று சொல்லிப் பம்மிவிடுகிறார்கள். இருக்கும் சொத்துகளைப் பாதுகாக்கவும், மேலும் தங்களை வளப்படுத்திக் கொள்ளவும் இந்த ஆட்சியாளர்களின் அனுகூலம் தேவையென்று அவர்களில் சிலர் நினைக்கிறார்கள். அதனால் தான், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தில்கூட, அவர்கள் பெரிதாகப் பொங்கி வெடிக்கவில்லை.

1991 - 96 கால கட்டத்தில், ஜெயலலிதா ஆட்சியில் நடக்காத ஊழலா, அவருக்குப் பக்கத்தில் இருந்த சசிகலா தரப்பு அப்போது குவிக்காத சொத்தா? ஆனாலும் ஜெயலலிதா, துணிச்சலாக திமுகவை எதிர்த்து நின்றாரா இல்லையா? திமுக தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டே இல்லையா, அவர்கள் எப்படி துணிந்து அரசியல் செய்கிறார்கள். எனவே, இன்னமும் ஆளும்கட்சிக்குப் பயந்து கொண்டிருக்காமல் ஜெயலலிதாவின் துணிச்சலோடு களமிறங்க வேண்டும் அதிமுகவினர். அதற்கு, ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் தான் முதலில் வழிகாட்ட வேண்டும். அதன் மூலம் “அவரே துணிந்து பேசுகிறார், நாம் பேசினால் என்ன வந்துவிடப் போகிறது” என்ற மனநிலையை கட்சியின் பிற தலைவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.

சசிகலா

களையெடுப்பு...

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நமது எம்ஜிஆர் பத்திரிகையின் பக்கம் எண்ணிக்கையே குறைந்துவிட்டது. அமைச்சரவை மாற்றம், நிர்வாகிகள் மாற்றம், நீக்கம் என்று எத்தனை எத்தனை அறிவிப்புகள் வந்த பத்திரிகை அது. ஆனால், இதுவரை ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது ஒரே ஒரு குரூப் மீது மட்டும்தான். சசிகலாவுடன் பேசியவர்கள், சின்னம்மாதான் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று சொன்னவர்கள் மீது மட்டும்தான், இவர்களின் ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்தது. அதுகூட தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தின் காரணமாகத்தான்.

தவறுசெய்த எந்த நிர்வாகி மீதும் நடவடிக்கை இல்லை. இதனால், கருணாநிதி காலத்து திமுக போல ஆகிவிட்டது இன்றைய அதிமுக. எப்படி வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, மு.க.அழகிரி என்று ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு அதிகார மையம் இருந்ததோ, அப்படி இப்போது அதிமுகவில் ஆளாளுக்கு கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்களை மீறி, வேட்பாளர்களைக்கூட அறிவிக்க முடியவில்லை இன்றைய தலைமையால். அதிகாரத்தில் இருந்தபோது சம்பாதித்த பணத்தில் கட்சிக்குச் செலவிடாமல் பதுக்கியதுடன், இந்த உள்ளாட்சித் தேர்தலில் தகுதியற்றவர்களை வேட்பாளராக்கி கட்சியைக் கெடுத்த அந்த நிர்வாகிகள் மீது துளியும் நடவடிக்கை இல்லை.

ஜெயலலிதா தவறே செய்யாதவர் இல்லைதான். ஆனால், கட்சியில் யார் தவறு செய்தாலும், அம்மா கவனத்துக்குப் போனால் அவ்வளவுதான் என்றொரு பயத்தை கட்சிக்குள் ஏற்படுத்தி வைத்திருந்தார். இப்போது அப்படி எதுவுமே இல்லை. மாறாக, கட்சியைக் குலைத்தவர்களையும் காட்டிக் கொடுத்தவர்களையும், வாயார புகழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ஈபிஎஸ். பாவம்!

அண்ணாமலை

தேவை நல்ல கூட்டாளிகள்...

‘எல்லாவற்றையும் மேலே இருப்பவன் (பாஜக) பார்த்துக்கொள்வான்’ என்கிற மிதப்பில், அதிமுக தனது நம்பிக்கையான கூட்டாளிகளை எல்லாம் மரியாதையாக நடத்தாமல் விரட்டிவிட்டுவிட்டது. தேமுதிக ஓர் உதாரணம். சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் சொன்ன ஒரு விஷயம் இவர்களின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. “எங்கள் வெற்றிக்குக் காரணம் கொள்கைக் கூட்டணிதான்” என்றார் ஸ்டாலின். அது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்தத் தேர்தலில் பாஜகவை கழற்றிவிட்ட அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளை இழுத்துப்போட இனியாவது முயற்சிக்கலாம். இப்போதைக்குத் தேர்தல் இல்லையே என்று கருதாமல், ஒரு பொது செயல்திட்டத்தின்கீழ் திமுகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஓரணியில் திரட்டலாம். திமுக கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என்று உழன்று கொண்டிருக்கும் கட்சிகளுக்கு மாலை போட்டு, ராஜமரியாதையுடன் தங்கள் பக்கம் ஈர்க்கலாம். அதுதான் எதிர்கால அரசியல் கூட்டணிக்கு அச்சாரம் போடும்.

தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்தால், ஒரு விஷயம் பிடிபடும். தமிழக அரசியலில் பாஜக மூக்கை நுழைத்தபோதே, திமுக கொள்கை அரசியலுக்குத் திரும்பிவிட்டது. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் திமுகவை வீழ்த்தியவர்களையும்கூட அந்த கொள்கை ஒன்று சேர்த்தது. இன்னமும் எம்ஜிஆர் பாட்டையும் ஏழைப் பங்காளன் கோஷத்தையும் நம்பி, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. என்பதை அதிமுக உணர வேண்டிய தருணம் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE