கோபி அருகே கூண்டில் புனுகுப்பூனை: வனப் பகுதிக்குள் விடுவிப்பு

By காமதேனு

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து கோழிகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கை பிடிக்க வைத்த கூண்டில் சிக்கிய 3 அடி நீளமுள்ள பெண் ‘புனுகுப்பூனை’ வனப்பகுதியினுள் விடுவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது மலையடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமம், விளைநிலங்களில் புகுவது வாடிக்கை. அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள அயலூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தனது விவசாய தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

அந்த கோழிகளை கடந்த சில தினங்களாக மர்ம விலங்குகள் கடித்து கொன்று வந்துள்ளது. அந்த விலங்கை பொறி வைத்துப் பிடிக்க நினைத்த விவசாயி பெருமாள் அதற்காக கோழிகள் வளர்க்கும் இடத்தில் கூண்டு ஒன்றை வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் கோழிகளுக்கு தீனி போடுவதற்கு பெருமாள் சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்திருந்த கூண்டில் மர்ம விலங்கு ஒன்று சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்த வனத்துறையினர் கூண்டில் பிடிபட்ட மர்ம விலங்கு குறித்து ஆய்வு செய்தனர். அதில் அம்மர்ம விலங்கு புனுகுப்பூனை எனத் தெரியவந்தது. அந்தப் பூனை சுமார் 3 அடி நீளம் இருந்தது. எனினும், அந்தப் பூனை கோழிகளை கொல்ல வாய்ப்பில்லை எனத் தெரியவந்தது. அதேவேளையில் பிடிபட்ட புனுகுப்பூனையை டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நவகிணறு மாதையன் கோயில் என்ற இடத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE