நாகூர் தர்கா நிர்வாகத்தை கவனிக்க பரிதாபானு நியமனம்

By கரு.முத்து

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உள்ள நாகூர்ஆண்டவர் தர்காவை நிர்வாகம் செய்ய, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் முதன்மை செயல் அலுவலர் பரிதாபானு நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம், நாகூரில் உள்ள நாகூர்ஆண்டவர் தர்கா நிர்வாகம், நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர்கள் 8 பேரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்ததையடுத்து, தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மற்றும் முரண்பாடு காரணமாக, கடந்த 2017 -ம் ஆண்டு முதல் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

நான்கு மாதங்களுக்கு மட்டுமே இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தர்கா நிர்வாகத்தை கவனித்து வந்தனர். இந்நிலையில் அவர்களை நீக்கம் செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் பொறுப்புகளை ஒப்படைக்காததால் தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபானு தலைமையிலான நிர்வாக அதிகாரிகள் நேற்று இரவு நாகூர் தர்கா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தர்கா வளாகம், தர்கா கட்டுப்பாட்டில் உள்ள நாகூர் மார்க்கெட் போன்றவைகளை நேரடியாக ஆய்வு செய்தனர். கோப்புகளை ஆய்வு செய்த பின்னர், இடைக்கால நிர்வாகிகள் பயன்படுத்திய கோப்பு அலமாரிகள், பாதுகாப்பு பெட்டகம், அவர்களின் அறை உள்ளிட்டவைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும், நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட்ட இடைக்கால நிர்வாகிகள் அலுவல் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. தர்கா நிர்வாகத்தை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் நிர்வகிக்க வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபானுவை நியமனம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால நிர்வாகிகள் அக்பர் மற்றும் அலாவுதீன் ஆகியோர் பதவி வகித்த காலங்களில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து தர்கா மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் தமிழ்நாடு வக்பு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் நாகூரில் பரபரப்பு நிலவுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE