அதிக மேயர் பதவி: காய் நகர்த்தும் தமிழக காங்கிரஸ்

By எம்.சகாயராஜ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக குறைந்த அளவு இடங்கள் ஒதுக்கிய நிலையில், அதிக மேயர் பதவிகளை கேட்ட தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஓப்பனாகவே தெரிவித்துவிட்டார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்டவை அதிக இடங்களை கைப்பற்றியது. வெற்றி பெற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வரும் 2ம் தேதி பதவி பதவியேற்க உள்ளனர். இதன் பின்னர் மார்ச் 4ம் தேதி மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

21 மாநகராட்சிகளை கைப்பற்றியுள்ள திமுக கூட்டணி, இந்த முறை அதிக இடங்களை கேட்ட கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், `நாங்கள் மேயர் பதவியை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்' என்று கூறிவிட்டார். இதேபோல் காங்கிரஸ் கட்சியும் மேயர் பதவி கேட்டு, அதுவும் கூடுதலாக கேட்டு காய் நகர்த்தி வருகிறது. இதன் தொடக்கமாக வரும் 28ம் தேதி முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள `உங்களில் ஒருவன்' என்ற சுயசரிதை நூலை ராகுல் காந்தி வெளியிட உள்ளார். இதன் பின்னர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் ராகுல் காந்தி பேசுகிறார். அப்போது, மேயர், துணை மேயர் பதவிகளை திமுகவிடம் அதிக அளவில் கேட்பது குறித்து மாநில தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, `திமுகவிடம் அதிக இடங்களில் மேயர் பதவி கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது' என்று ஓப்பனாகவே பேசிவிட்டார். இதனால், மேயர் பதவி கேட்டு காங்கிரஸ் காய் நகர்த்துவது உறுதியாகிவிட்டது. மேலும் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். "நீங்கள் மூன்றாவது கட்சியாக அல்ல, முப்பதாவது கட்சியாக இருந்தால்கூட அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், நீங்கள் உரிமை கோருகிறார்கள் என்று சொன்னால் அந்த உரிமை கோருவதற்கு பின்னால் உண்மை இருக்கவேண்டும், நேர்மை இருக்கவேண்டும்" என்று அழகிரி விமர்சனம் செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE