குமரி மாவட்டத்தில், மார்ச் 1-ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநாளில் தமிழக முதல்வர் தமிழகம் முழுதும் உள்ள மாணவ, மாணவிகள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்து உரையாற்றுவது, குமரி மாவட்ட மாணாக்கர்களுக்கு பயன்படாத சூழல் உருவாகும் என அதிமுக ஆதங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கூறும்போது, ‘‘குமரி மாவட்டத்தில், மார்ச் 1-ம் தேதி மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்றைய நாளில் குமரி மாவட்டத்தில் நடக்கும் சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்திபெற்றது. இதை மையப்படுத்தியே மார்ச் 1-ம் தேதி, குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையில் வரும் மார்ச் 1-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், வேலைவாய்ப்பு வழிகாட்டுமுறைகள் குறித்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களை வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் எழுந்துள்ளது. தமிழகத்திலேயே சிவாலய ஓட்டம் நடைபெறும் ஒரே மாவட்டம் இதுதான்.
இதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியை வேறு தேதியில் நடத்த வேண்டும். அல்லது குமரிக்கு மட்டுமேனும் வேறு தேதிக்கு இந்நிகழ்ச்சியை மாற்ற வேண்டும்’’ என்றார்.