பாஜகவில் இணைந்த `குலாபி கேங்’ தலைவி சம்பத் பால்

By ஆர். ஷபிமுன்னா

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லைகளில் அமைந்துள்ளது புந்தேல்கண்ட் பகுதி. பெரிய அளவிலான தொழிற்சாலைகளுமின்றி, வேலை இல்லாத் திண்டாட்டத்தில் இந்த பகுதி மூழ்கி உள்ளது. ஒரு காலத்தில் தேர்தல் சமயம் தவிர, அரசியல்வாதிகளின் புறக்கணிக்கப்பட்ட பகுதி புந்தேல்கண்டை கூறலாம். இங்கு ஒடுக்கப்பட்ட பெண்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க அவர்கள் இடையே ஒரு குழு உருவானது. சுமார் 25 வருடங்களுக்கு முன் சம்பத் பால் என்பவரால் அமைந்த குழுவின் பெயர் ‘குலாபி கேங்'. (ரோஸ்நிறக் கூட்டம்)

அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன சம்பத்பாலுடன் கைகளில் கம்புகளுடன் ரோஸ்நிறச் சேலைகளில் செல்வதால் அவர்களுக்கு இந்த பெயர் ஏற்பட்டது. இதையே தனது குழுவின் பெயராக்கிவிட்ட சம்பத் பால் பெயர், புந்தேல்கண்வாசிகள் இடையே கிடுகிடுவெனப் பரவியது. காசுக்காக மனைவியை தொல்லை கொடுக்கும் குடிகாரக் கணவன், வரதட்சணை கொடுமை செய்பவர்கள், மணமுடிக்காமல் காதலுடன் கைகழுவ முயலும் காதலர்கள் என உட்பட பல குடும்பப் பிரச்சினைகளில் தலையிட்டு குலாபி கேங் முடித்து வைத்தது.

குலாபி கேங் குழு பெண்களுடன் சம்பத்பால்

இதுமட்டுமின்றி, அரசு சான்றிதழ்களுக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், அரசு நிவாரண உதவி கிடைப்பதற்கானத் தடைகள், புகார்களுக்கு வழக்குப் பதிவு செய்யாத போலீஸ் என அனைத்து வகைப் பிரச்சினைகளிலும் குலாபி கேங் தலையிட்டு வந்தது. இதற்காக, பிரச்சினைகளுக்கு ஏற்றபடி சுமார் ஐந்து முதல் ஐந்நூறு பெண்கள் ரோஸ்நிறச் சேலைகள் அணிந்து கைகளில் நீண்ட கம்புகளுடன் ஆஜராகி விடுகிறார்கள். தொடர்ந்து, இவர்கள் போடும் கோஷங்களை தாங்காமல் முன்னே இருப்பவர் அரசு அதிகாரியானாலும் தலைவணங்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதன்மூலம், உலகம் அளவில் பிரபலம் அடைந்துவிட்ட சம்பத் பாலின் செய்தியை பிபிசியும் முக்கிய செய்தியாக்கி இருந்தது. மாதுரி தீக்ஷித் நடிப்பில் ‘குலாபி கேங்' எனும் பெயரிலேயே பாலிவுட்டிலும் திரைப்படமாக வெளியானது. இவரது புகழ் காரணமாக கடந்த 2012 சட்டப்பேரவை தேர்தலில் சம்பத் பாலுக்கு காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. சித்ரகுட் மாவட்டத்தின் மாணிக்பூர் தொகுதியில், சுமார் 23,000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார் சம்பத்பால். இதனால் அங்கு காங்கிரஸ் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருந்தது. ஆனாலும், அடுத்து நடந்த 2012 சட்டப்பேரவை தேர்தலிலும் சம்பத் பாலுக்கே காங்கிரஸ் வாய்ப்பளித்தது. இதில் இரண்டாவது இடத்திற்கு காங்கிரஸை முன்னேற்றினாலும் சம்பத்பாலுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இச்சூழலில் தற்போது நடைபெறும் 2022 சட்டப்பேரவை தேர்தலிலும் சம்பத் பால் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், இந்தமுறை அவருக்கு மறுப்பு தெரித்த காங்கிரஸ், மாணிக்பூரில் ரஞ்சனா பாரதி லால் என்பவருக்கு வாய்ப்பளித்தது. இதனால், காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி அடைந்தார் சம்பத்பால். இந்தசமயத்தில், சித்ரகுட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார் பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத். அப்போது அவரை மேடையிலேயே சந்தித்து பேசிய சம்பத்பால், பாஜகவில் இணைந்தார். இவருடன் குலாபி கேங் குழுவின் பல முக்கிய உறுப்பினர்களானப் பெண்களும் பாஜகவில் இணைந்தனர்.

குலாபி கேங் குழு பெண்களுடன் சம்பத்பால்

குலாபி கேங்கை பற்றி பிரான்சிலிருந்து வந்த ஒரு எழுத்தாளர் சம்பத் பாலின் சேவைகளை நூலாக எழுதி பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளார். லண்டனில் இந்த கேங்கை பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி வெளியிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது. அந்நாட்டின் ஆங்கில நாளிதழான ‘கார்டியன்’, உலகின் சிறந்த பெண்மணிகளாக மார்ச் 2011-ல் தேர்ந்தெடுத்த 4 பெண்களில் இந்தியாவின் சம்பத்பாலும் ஒருவர். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் இந்த கேங்கை பற்றி ஆய்வும் செய்யப்பட்டது. கடந்த 2010-ல் பிரான்சில் நடந்த ‘குளோபல் வுமன் ஃபோரம் ஃபார் எகனாமி அண்ட் சொசைட்டி’ எனும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு சம்பத் பால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வளவு புகழ் வாய்ந்த சம்பத்பாலுக்கு அரசியலில் மட்டும் ஏனோ வெற்றி கிடைக்கவில்லை. அவரது புகழை கண்டு பல அரசியல் கட்சிகள் வீசிய வலைக்கு சம்பத் பால், காங்கிரஸிடம் சிக்கினார். ஆனால், அவரால் அக்கட்சியில் நிலைக்க முடியவில்லை. இப்போது, புதிதாக சேர்ந்துள்ள பாஜகவில் சம்பத்பாலின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஏனெனில், பெண்களின் உரிமைக்காக கைகளில் கம்புகளுடன் ஆளும் அரசுடன் போராடியவர், அந்த கட்சியிலேயே இணைந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE