தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் சார்பில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், அந்த பல்கலைக்கழகத்துக்கு அரசு சார்பில் நான்கு வார கெடு அளிக்கப்பட்டிருக்கிறது.
தஞ்சாவூர் அருகே, திருமலைசமுத்திரத்தில் இயங்கிவரும் புகழ்பெற்ற சாஸ்திரா பல்கலைக்கழகம், அந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் பல்வேறு கட்டிடங்களை கட்டி வகுப்புகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ன்படி, அரசு நிலத்தில் செய்துள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுமாறு பல்கலைக் கழகத்துக்கு ஏற்கெனவே வருவாய்த் துறையினர் அறிவிப்புகளை வழங்கி உள்ளனர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை காலி செய்யவில்லை. அதற்கு பதிலாக மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதால், அரசு நிலத்தை தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தது.
மேலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகளை செய்திருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்த நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து, இன்று மாலை தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா தலைமையில் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள், சாஸ்த்ரா பல்கலைக்கழக வாயிலில் உள்ள சுவற்றி்ல் ஆக்கிரமித்துள்ள நிலத்தை காலி செய்யுமாறு அறிவிப்பு நோட்டீஸை ஒட்டியுள்ளனர்.
இதில் ஆக்கிரமிப்புக்குள்ளான இடத்தை 4 வார காலத்துக்குள் அதாவது, வரும் மார்ச் 24-ம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், வருவாய்த் துறை சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத் தொகையை பல்கலைக்கழகத்திடமே வசூலிக்கப்படும் என தஞ்சாவூர் வட்டாட்சியர் கையெழுத்திட்டுள்ளார்.