கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே தொடக்கப் பள்ளியில் முட்டையுடன் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே, அத்தியா நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இன்று மதியம் சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டது. இவற்றை சாப்பிட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் சஞ்சய், பிரதீஸ்வரன், மாதேஷ் உள்ளிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தியும், அதைத் தொடர்ந்து மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்து மாணவர்கள் வீடு திரும்பினர். மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்து குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
மாணவர்கள் சாப்பிட்ட முட்டை கெட்டுப் போயிருக்கலாம் என பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இது குறித்து கல்வித் துறை மற்றும் சமூகநலத் துறை அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.