மாணவன் அப்துல் கலாமுக்கு புது வீடு ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு

By காமதேனு

மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் அப்துல் கலாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டிய நிலையில், அவரது குடும்பத்துக்கு புது வீட்டை வழங்கியுள்ளது தமிழக அரசு.

இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் அப்துல் கலாமை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, தாங்கள் வறுமை நிலையில், வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என மாணவர் அப்துல் கலாமின் பெற்றோர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாணவர் அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு 'பெரியார் இன்றும் என்றும்' நூலினை பரிசாக வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

அப்துல் கலாம் பெற்றோரின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பேரில், இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்த, அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டதாகவும், நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்க உத்தவிட்டிள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகநூலில் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு 'பெரியார் இன்றும் என்றும்' நூலினை பரிசாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE