ஹிஜாப் விவகாரத்தில் பாஜக வலையில் விழ வேண்டாம்!

By காமதேனு

கர்நாட மாநில பாஜக அரசின் தோல்விகளில் கவனம் செலுத்துமாறு அம்மாநிலக் காங்கிரஸாரிடம் அறிவுறுத்தியிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹிஜாப் விவகாரத்தில் பாஜக விரிக்கும் வலையில் விழ வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறார்.

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று நடைபெற்றது. கர்நாடகக் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில் பேசிய ராகுல் காந்தி, பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் தவறுகளில் கவனம் செலுத்துமாறு காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுகொண்டதாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியிருக்கிறார்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தச் சூழலில், அம்மாநிலத்தில் நடந்த க்ரிப்டோ கரன்ஸி மோசடி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை வைத்து பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிடுகிறது.

கர்நாடகத்தில், கல்விநிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையில், ஆளுங்கட்சியான பாஜக ஆதாயம் தேடிவருவதாகக் காங்கிரஸ் கட்சியினர் கருதுகிறார்கள். இப்பிரச்சினை மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதில் பாஜக தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுவதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். ஹிஜாப் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அது குறித்து வெளிப்படையாக அவர்கள் பேசுவதில்லை.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கும் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருப்போம். நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக ஒரு முடிவை எடுக்கலாம். அதுவரை, ஹிஜாப் தொடர்பாகக் கருத்து தெரிவிக்க வேண்டாம்” எனக் கூறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE