நாடாளுமன்றத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வலியுறுத்தி பிரதமருக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடிதம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: நாடாளுமன்றத்தில் வரும் 2024-25 ஆண்டிலிருந்தாவது வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமி மலை சுந்தர. விமலநாதன் தெரிவிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: "2024 - 25 ஆண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையில் இருந்து இனி வரும் காலங்களில் இந்திய விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கை என்பது பெயரளவில் இல்லாமல் உண்மையான தனித்துவமான தனி நிதிநிலை அறிக்கையாக இருக்க வேண்டும். புதுடெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை விவசாய தியாகிகளாக மத்திய அரசு அறிவித்து போராட்டங்களில் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளைத் தர வேண்டும்.

2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் உழவர்கள் வெகுமதி திட்டத்திற்கான தொகையை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், இந்த திட்டத்தில் இந்தியாவிலுள்ள சுமார் 2 கோடி குத்தகை விவசாயிகளும் சேர்க்கப்பட வேண்டும். வெளி நாடுகளில் இருந்து பாமாயில் கொள்முதல் செய்வதைத் தடை செய்து உள்நாட்டில் உற்பத்தி ஆகும் உடல் நலனுக்கு உகந்த தேங்காய் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்து, உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காயை கொள்முதல் செய்யும் கொள்கை முடிவை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

மேலும், தேங்காய் கொப்பரையை மத்திய அரசே முழுமையாக கொள்முதல் செய்து அதன் மூலம் தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து, நியாய விலை கடைகளுக்கு வழங்குகின்ற பாரத் அரிசி , பாரத் கோதுமை, பாரத் மைதா, பாரத் பருப்பு என்ற பட்டியலில் இணைத்து பாரத் தேங்காய் எண்ணெய்யும் வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தினை 200 நாட்கள் வேலையாக விரிவுப் படுத்தி ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.450 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். மின் திருத்தச் சட்டம் 2020-யை முற்றிலுமாக நிபந்தனை இன்றி விலக்கிக் கொள்ள வேண்டும்.

"பிரதமரின் விவசாயத் தொழிலாளிகள் ஓய்வு உரிமைத் தொகை திட்டம்" என புதிய திட்டத்தை அறிவித்து இந்தியா முழுமையும் உள்ள 58 வயதைக் கடந்த விவசாயிகளில் ஆண், பெண் இருபாலருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும். பிரதமரின் உழவர்கள் வெகுமதி திட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்ற மோசடி முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விவசாயிகளின் குழந்தைகள் பெற்றிருக்கின்ற கல்விக் கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

விவசாயிகள் வயலில் வேலை செய்யும் பொழுது இயற்கை இடர்பாடுகளால் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். மத்திய அரசு இயற்கை வழி வேளாண்மைக்கும் முழு அளவிலான மானியத்தை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE