நீலகிரி ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினை

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்ட ரேஷன் கடைகளில், சமீப நாட்களாக அடிக்கடி ‘சர்வர்’ பிரச்சினை ஏற்பட்டு பொருட்கள் வாங்க மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 403 நியாயவிலைக் கடைகள் உள்ளன. அவற்றில் 298 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 105 பகுதிநேர கடைகள் மற்றும் 33 நடமாடும் நியாயவிலைக் கடைகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் 6 கிடங்குகள் உள்ளன.

இந்த ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு மாதத்துக்குத் தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, மண்எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் 2 லட்சத்து 20 ஆயிரத்து 497 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

ஏற்கெனவே, குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு, ஆதார் அட்டையும் இணைக்கப்பட்டு போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை மேலும் மேம்படுத்தி, பயோமெட்ரிக் முறையான கைரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதியவர்களின் கை ரேகைகள் அழிவதால், பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் நிலவி வருகிறது.

சர்வர் கோளாறு

குறிப்பாக சர்வர் குறைபாட்டால் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பயோமெட்ரிக் முறையை கைவிட்டு, பழைய நடைமுறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கடந்த 3 நாட்களாக சர்வர் கோளாறு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் வாங்க மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: “வேலைக்குச் செல்லும் நேரத்திலும் அவகாசம் கேட்டும், விடுப்பு எடுத்தும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வருகிறோம். சில தினங்களாக ‘சர்வர்’ பிரச்சினை இருப்பதால், தற்போது பொருட்கள் வழங்க இயலாது. நாளை வாருங்கள் என விற்பனையாளர் கூறி அனுப்பி விடுகிறார்.

அந்தந்த மாத பொருட்கள் மாத இறுதிக்குள் கணக்கு முடிக்கப்பட்டு விடும். பிப்ரவரி மாதம் குறைந்த நாட்களே இருப்பதால், ‘சர்வர்’ பிரச்சினை காரணமாக பொருட்கள் வாங்க இயலாத சூழல் உள்ளது. மேலும், வேலைக்குச் செல்பவர்கள் அடிக்கடி அவகாசம் கேட்டும், விடுப்பு எடுத்தும் வருவதால் வருவாய் இழப்பு ஏற்படும். நாளை மற்றும் சனிக்கிழமையும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால், இம்மாத இறுதி நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அனைவரும் பொருட்கள் வாங்க வந்தால், கூட்டம் கூடும். எனவே ‘சர்வர்’ பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கடை ஊழியர்கள் கூறும்போது, ‘‘பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் சர்வர் கோளாறு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க முடியாத நிலை நிலவி வருகிறது. இந்த மாதம் இறுதி நாட்களில் சர்வர் கோளாறு காரணமாக பொருட்கள் வழங்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 3-வது நாளாக இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதைப் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு புரியவைக்க முடியாமல் மிகுந்த வேதனையடைந்து வருகிறோம். எனவே சர்வர் பிரச்சினை இன்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE