அதிமுகவில் தலைமையே கிடையாது: பற்றவைத்த செல்லூர் ராஜூ

By காமதேனு

"அதிமுகவில் தலைமையே கிடையாது" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுக வென்றதற்கு காரணம். ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக அதிமுக தனித்து களம் கண்டது. அதிமுகவில் தலைமையே கிடையாது. இப்போது இருப்பவர்களை கட்சியை வழி நடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம்.

அதிமுக வாக்கு வங்கி குறையவில்லை. வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை. திமுக ஆட்சி மீது உள்ள விரக்தியில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை. அதிமுக, திமுகவில் சங்கமமாகிவிடும் என அமைச்சர் பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. திமுகதான் அதிமுகவில் இணையும். பாஜக மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்வதற்கு காரணம், அது எப்போதும் வளரும் கட்சிதான், அவர்கள் அப்படி தான் சொல்வார்கள். தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும். மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE