இந்திய மருத்துவ விதியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

By காமதேனு

அயல்நாடுகளில் மருத்துவபடிப்பை படிப்பதற்கும், இந்தியாவில் பதிவு செய்வதற்கும் தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள விதிகளை எதிர்த்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் 2021ஆம் ஆண்டு விதிகளின் படி அயல்நாடுகளில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டால், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்றும், அதன்பின்னர் 12 மாதங்கள் பயிற்சியும் பெற்றிருப்பது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல அயல்நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவில் பதிவு செய்ய, அதற்கான தகுதி தேர்வை எழுதி, புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டுமெனவும் விதி வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த அரவிந்த் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், மொரீசியஸ் நாட்டில் மருத்துவம் படித்து மருத்துவராகும் கனவிற்கு இந்த விதிகள் இடையூறாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மொரீசியஸ் 36 மாதங்கள் மட்டுமே கல்வி வழங்கப்படும் நிலையில், 54 மாதங்கள் என்பது நிர்ணயித்திருப்பதும், புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரியில் பயிற்சி என்பதும் இடையூறாக இருப்பதால் அந்த விதிகளை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நோயாளிகளின் உயிர் காப்பது தொடர்பான படிப்பை, விரைவு படிப்பாக படிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில் தான் விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சட்டவிரோதம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளில் சமரசம் செய்ய முடியாது எனக் கூறி, மனுதாரர் அரவிந்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் மொரீசியஸ் கல்லூரியில் விண்ணப்பம் கூட செய்யாத நிலையில், யூகத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அந்த தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE