அதிமுக மும்மூர்த்திகளுக்கு நெருக்கடி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சியில் 15 வார்டுகளில் மட்டுமே வெற்றிப்பெற்றதோடு மாவட்டம் முழுவதும் மோசமான தோல்வியை அதிமுக சந்தித்துள்ளதால் அக்கட்சியின் மும்மூர்த்திகளுக்கு கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் மும்மூர்த்திகள் போல் செயல்படுகின்றனர். இவர்கள் மூவரும் கட்சியில் மாவட்டச் செயலாளர்களாகவும், கடந்த கால ஆட்சியில் செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயகுமார் ஆகியோர் அமைச்சர்களாகவும், ராஜன் செல்லப்பா மேயராகவும் செல்வாக்குடன் இருந்தவர்கள். தற்போது ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும் மாவட்டச் செயலாளர்களாக கட்சியில் செல்வாக்காக தொடர்கின்றனர். இவர்களை மீறி மதுரை மாவட்ட கட்சியில் யாரும் தலையெடுக்க முடியவில்லை.

அதிமுகவின் பலமே யாருக்கும் எந்த நேரத்திலும் கட்சிப்பதவியும், தேர்தலில் வேட்பாளர் ‘சீட்’ தேடி வரும். அதுவே கட்சியின் வளர்ச்சிக்கு புத்துயிர் கொடுத்துவந்தது. ஜெயலலிதா இருந்தவரை இந்த பார்முலா இருந்தது. தற்போது திமுகவைபோல் அதிமுகவிலும் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோருக்கும், அவர்கள் உறவினர்களுக்கும் மட்டுமே கட்சியில் பதவிகளும், தேர்தலில் ‘சீட்’டும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மாநகர அதிமுகவில் மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூயை மீறி இளைஞர்களால் செல்வாக்குப்பெற முடியவில்லை. அதனால், பலர் மாற்றுகட்சிகளுக்கு சென்றுவிட்டதால் தற்போது மாநகர அதிமுகவில் இளம் நிர்வாகிகள் பலர் கட்சியில் தீவிரமாக செயல்படாமல் ஒதுங்கி நிற்கின்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்லில் மதுரை மாவட்டத்தில் அதிமுக ஒரு உள்ளாட்சியைகூட கைப்பற்றவில்லை. மாநகராட்சியில் அதிமுக 100 வார்டுகளில் தனித்து போட்டியிட்டது. மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவின் கட்டுப்பாட்டில் 71 வார்டுகளும், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா கட்டுப்பாட்டில் 29 வார்டுகளும் உள்ளன. 71 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் தேர்வில் மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூ வெற்றிவாய்ப்புள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் முழுக்க முழுக்க தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்ததாக வேட்பாளர் பட்டியல் வெளியானது போதே குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால், ‘சீட்’ கிடைக்காத முன்னாள் கவுன்சிலர்கள் பலர், பாஜக, அமமுக சார்பிலும், சுயேச்சையாக போட்டியிட்டனர். மற்றவர்கள், அந்த வார்டுகளில் தங்கள் உறவினர்களை போட்டியிட வைத்து அதிமுகவுக்கு எதிராக உள்ளடி வேலைப்பார்த்தனர். மற்றும் பலர் மறைமுக திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அதுபோல், புறநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி வார்டு வேட்பாளர்கள் தேர்விலும் ராஜன் செல்லப்பா கோட்டைவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்வளவுக்கு இவர், கடைசியாக மாநகராட்சி மேயராக இருந்தவர், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் அதிமுகவின் பலம், பலவீனம் அறிந்தவர். அப்படியிருந்தும் இவரால் அதிமுகவுக்கு வலுவான வேட்பாளர்களை தேடிப்போட முடியவில்லை. அதனால், தேர்தல் பணியில் கட்சித்தொண்டர்கள் கடந்த காலங்களை போல் சுறுசுறுப்பாக வேலை செய்யாமல் சோர்ந்து காணப்பட்டனர். வேட்பாளர்களுக்கு கட்சியில் இருந்து தேர்தல் செலவுக்கு பணம் வழங்கவில்லை.

வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு பணம் வழங்கவில்லை என்று குமுறியபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், ‘சீட்’ வாங்கும்போது செலவு செய்கிறோம் என்று சொல்லிதானே வாங்கினீர்கள், செலவு செய்யுங்கள் என்று வேட்பாளர்களிடம் கறாராக கூறிவிட்டார். அதனால், தேர்தல் பணிகளில் செல்லூர் கே.ராஜூவுக்கும், வேட்பாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை. அதுபோல், ராஜன் செல்லப்பாவும் முன்போல் தேர்தல் களப்பணியில் தீவிரமாக செயல்படவில்லை. ஆர்பி.உதயகுமார் தீவிரமாக செயல்பட்டாலும் அவரது பிரச்சாரமும், தேர்தல் வியூகமும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்லில் எடுப்படவில்லை. அதனால், மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளை கைப்பற்றவில்லை.

மதுரை மாநகராட்சியில் வெற்றிவாய்ப்புள்ள பல வார்டுகளில் அதிமுக தோல்வியடைந்தது. தற்போது அதிமுக வெறும் 15 வார்டுகளில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. 31 வார்டுகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. செல்லூர் ராஜூ மாவட்டச் செயலாளராக உள்ள 71 வார்டில் 14 வார்டுகளிலும், ராஜன் செல்லப்பா மாவட்ட செயலாளராக உள்ள 29 வார்டுகளில் ஒரே ஒரு வார்டிலும் அதிமுக வெற்றிப்பெற்றுள்ளது. இருவர் மாவட்டங்களிலும் அதிமுக போட்டியிட்ட 31 வார்டுகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட வார்டுகளில் கூட அதிமுக பெரிய வெற்றியை பெற முடியில்லை. அதனால், கடைசி தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கைப்பற்றிய நிலையில் தற்போது இந்த தேர்தலில் திமுகவிடம் பறிகொடுத்துள்ளது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பிரச்சாரத்திற்கு மதுரை வந்த முன்னாள் முதல்வர் கே.பழனிசாமிகூட, மதுரையின் மும்மூர்த்திகள் என்று பாராட்டிதோடு சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் வெற்றியை தேடி தந்ததாக பெருமிதம் கொண்டார். ஆனால், தற்போது மதுரை மாவட்ட அதிமுக உட்கட்சி பூசால் கட்சி கரைகிறதோ என்று அக்கட்சி தொண்டர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE