ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை

By ரஜினி

ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவல் துறை டிஜிபி, காவல் ஆணையருக்கு தெற்கு ரயில்வே கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் சிலர், ரயிலில் பயணிக்கும்போது பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் காவலர்களிடம் பயணச்சீட்டு கேட்கும்போது, அவர்கள் ஆவணங்களைக் காண்பிக்காமல் அடையாள அட்டையை காண்பித்துப் பயணிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில், தமிழக காவல் துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், ரயில்களில் அடையாள அட்டையை காண்பித்து தமிழக காவலர்கள் பயணிப்பதாக ரயில்வே நிர்வாகத்துக்கு அதிகப்படியான புகார்கள் வருவதாகவும், எக்ஸ்பிரஸ் உட்பட பல ரயில்களில் காவலர்கள் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளின் இருக்கையில் அமர்ந்து முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் பயணிப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அவ்வாறு பயணம் செய்யும் காவலர்களிடம் டிக்கெட் பரிசோதகர் பயணச்சீட்டு ஆவணங்களை கேட்டால், அடையாள அட்டையை காண்பித்து தொடர்ந்து அதே ரயிலில் பயணிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பயணச்சீட்டு குறித்த ஆவணங்களை உடனடியாக காவலர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், இதுபோன்று பயணிக்கும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களுக்குத் தேவைப்படும் ரயில் பயண பாஸ் குறைவான எண்ணிக்கையில் வருவதால், இதுபோன்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE