பத்திரிகை நல வாரியத்திற்கான குழுவை அமைத்தது தமிழக அரசு

By காமதேனு

பத்திரிகை நல வாரியத்திற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளித்திடும் வகையில், 'பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 3 அரசாணை வெளியிட்டது.

அதன்படி, நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத்திட்ட உதவிகளுடன், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருக்கலைப்பு, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் நலவாரியத்தின் மூலம் வழங்க இந்த அரசாணை வழிவகை செய்கிறது என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், பத்திரிகை நல வாரியத்திற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைவராகவும், அலுவல் சாரா உறுப்பினர்களாக திருவாளர்கள் சிவந்தி ஆதித்தன் பாலசுப்பிரமணியன் (தினத்தந்தி குழுமம்), ஆர்.எம்.ஆர்.ரமேஷ் (தினகரன்), பி.கோலப்பன் (தி ஹிண்டு), எம்.ரமேஷ் (புதிய தலைமுறை), எஸ்.கவாஸ்கர் (தீக்கதிர்), லட்சுமி சுப்பிரமணியன் (தி வீக்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE