பிறந்தநாளில் ஜெயலலிதாவை கவுரவப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

By காமதேனு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கவுரவப்படுத்தும் விதமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளது தமிழக அரசு.

அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளை இன்று அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்த அதிமுகவினருக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

இதனிடையே, ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழக மக்கள் தொடர்த்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், `முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள டாக்டர் ஜெ ஜெயலலிதா வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சீர்மிகு பெருமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், `அதிமுகவின் மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசு தமிழ் நாளிதழில் விளம்பரம் செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் கலைஞரின் பிறந்தநாளுக்கு இதுபோன்ற விளம்பரங்களை பார்த்ததாக நினைவில்லை. தமிழகத்தில் சிறந்த தலைவர்களில் ஒருவராக ஸ்டாலின் விளங்குகிறார்' என பதிவிட்டுள்ளார் பத்திரிகையாளர் அன்புசெல்வன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE