புவனகிரியில் விறுவிறுப்பாக நடக்கிறது மறுவாக்குபதிவு

By கரு.முத்து

கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு மையம்

கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சியில் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் என்னும் பணியும் தமிழ்நாட்டில் மற்ற இடங்களைப் போலவே நேற்று முன்தினம் நடைபெற்றது. 4-வது வார்டில் பதிவாகியிருந்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றபோது, அங்கு பதிவு செய்யப்பட்டிருந்த வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்து இருப்பது தெரியவந்தது. பதிவான வாக்குகளை அது காண்பிக்கவில்லை.

ஆர்வமாக வாக்களிக்கும் வாக்காளர்

எனவே, அந்த ஒரு வார்டுக்கு மட்டும் மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் அங்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணிவரை வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின், 6 மணி வரை ஒரு மணி நேரம் கரோனா பாதித்தவர்களும் வாக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் அந்த மையத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மொத்தம் 18 வார்டுகளை கொண்ட புவனகிரி பேரூராட்சியில் திமுக 8 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 3 இடங்களையும் பிடித்து இருப்பதால், ஏற்கெனவே புவனகிரி பேரூராட்சி திமுக வசம் வந்து விட்டது என்றாலும், இந்த ஒரு வார்டில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆவல் மேலோங்கி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE