குன்னூர் நகராட்சியில் வெற்றி வாகை சூடிய தம்பதி

By காமதேனு

குன்னூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஜெகதளா பேரூராட்சியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்துள்ளார் திமுக வேட்பாளர் பிரமிளா.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சியின் 30 வார்டுகளுக்கு நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், சரவணகுமார் - லாவண்யா தம்பதியினர், அதிமுக சார்பில் தனித்தனி வார்டுகளில் போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில், மூன்றாவது வார்டில் போட்டியிட்ட சரவணகுமார் 384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதே போன்று குன்னூர் 11வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவியான லாவண்யா 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கணவன், மனைவி இருவர், குன்னூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த திமுக வேட்பாளர் பிரமிளா

இந்நிலையில், ஜெகதளா பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 11வது வார்டில் திமுக வேட்பாளர் உ.பிரமிளா வெங்கடேஷ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்துள்ளார். இந்த வார்டில் மொத்தமுள்ள 820 வாக்குகளில் 482 வாக்குகள் பதிவாயின. திமுக வேட்பாளர் உ.பிரமிளா வெங்கடேஷ் 264 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் த.சதீஸ்குமார் மற்றும் 5 சுயேச்சைகள் டெபாசிட் இழந்தனர். அதிமுக வேட்பாளர் 82 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

கூடலூர் நகராட்சியில் உள்ள 21 ஒரே ஒரு வார்டில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. வார்டு எண் 9ல் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சையது அனுப்கான் மட்டும் வெற்றி பெற்றார். உதகை நகராட்சியில் 21வது வார்டில் சுயேச்சை ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றார். இவர் 22வது வார்டில் வசிப்பவர். இதனால் இவருக்கு அந்த வார்டில் வாக்கு இல்லை. இந்நிலையில், 21வது வார்டில் உள்ள ஒருவர் அவருக்கு வாக்களித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE