மன்னார் வளைகுடாவில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம்

By காமதேனு

"அழிவு நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், "பால்க் விரிகுடா இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு ஆழமற்ற கடல் ஆகும். பால்க் விரிகுடா அதன் சுற்றுச்சூழலில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் அனைத்து முக்கிய குழுக்களையும் கொண்ட பல்லுயிர் வளமாக உள்ளது. அதில், முதன்மை இனமாக கடற்பசு உள்ளது. ஆனால், கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல் போன்ற காரணத்தால் தற்போது அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

இதனால், தமிழகத்தில் அழிந்து வரும் கடல் பசு இனங்கள் மற்றும் அதன் கடல் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையில், மன்னார் வளைகுடா, பால்க் விரிகுடா கடல் பசு பாதுகாப்புக் காப்பகம் நிறுவப்படும் என்று கடந்த 03.09.2021 அன்று வனத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வு பணிகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE