தேய்கிறதா அதிமுக எனும் பேரியக்கம்?

By டி. கார்த்திக்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. இத்தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. மறுபுறம், அதிமுகவின் மோசமான தோல்வி அக்கட்சியின் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகள், 89 நகராட்சிகள், 285 பேரூராட்சிகள், 566 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3,727 ஊராட்சி ஒன்றியங்களை அநாயசமாக வாரிச் சுருட்டியது அதிமுக. சரியாக 10 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற தேர்தலில் 21 மாநகராட்சிகளில் ஒன்றைக்கூட அதிமுகவால் வெல்ல முடியவில்லை. மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளில் 164 வார்டுகளிலும், 3,843 நகராட்சிகள் வார்டுகளில் 638 வார்டுகளிலும், 7,621 பேரூராட்சி வார்டுகளில் 1,206 வார்டுகளை மட்டுமே அதிமுகவால் கைப்பற்ற முடிந்துள்ளது.

வெற்றிகளைக் குவித்த ஜெயலலிதா

2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ந்து 4 தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை நெருங்கவிடாமல் வெற்றியை அதிமுகவுக்கு பெற்று தந்தார் ஜெயலலிதா. குறிப்பாக 2014 மக்களவைத் தேர்தலில் 44 சதவீத வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சிகளை எல்லாம் நடுங்கவைத்தார். ‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளைக் காணவில்லை’ என்ற ஜெயலலிதா உதிர்ந்த வார்த்தைகளே, அப்போதே அதிமுக எத்தனை வலிமையாக இருந்ததது என்பதற்கு ஓர் உதாரணம்.

2011-ம் ஆண்டைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடி, அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவிட்டு மறைந்துபோனார் ஜெயலலிதா.

தொடரும் தோல்விகள்

ஜெயலலிதா மறைந்து 5 ஆண்டுகள் முழுமையாக முடிந்துபோய்விட்டது. இதில் 2019-ம் ஆண்டில் விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலைத் தாண்டி அதிமுகவால் திமுகவை வெல்லவே முடியவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றியை அறுவடை செய்தது. அப்போது ஓரிடத்தில் மட்டுமே அதிமுக வென்றது. அதே ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 214 மாவட்ட ஊராட்சி கவுன்சில், 1,792 ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களை வென்றது. ஆனால், ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவைவிட எதிர்க்கட்சியாக இருந்த திமுக அதிக இடங்களில் வென்று ஆச்சரியமூட்டியது. அதாவது, 244 மாவட்ட கவுன்சில்கள், 2,095 ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களை திமுக வென்றது. 1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு 2019-ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி தோற்றது நடந்தேறியது.

அதைத் தொடர்ந்து 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து 75 தொகுதிகளில் வென்றது. அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்று ஆட்சியை இழந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் 2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலை மட்டுமே வெல்ல முடிந்தது. ஆனால், திமுக 139 கவுன்சில்களை வென்றது. அதிமுக ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகம் வென்றதைப் போல, திமுக ஆட்சியில் நடந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவே வென்றது. இப்படி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கடந்த 5 ஆண்டுகளாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

ஒருங்கிணைப்பு இல்லை

1996-ல் வரலாற்றில் மிக மோசமாகத் தோல்வியடைந்த அதிமுக, 1998 மக்களவைத் தேர்தலில் எழுந்து நின்றது. இதேபோல 2004 மக்களவைத் தேர்தலில் மிக மோசமான தோல்வியையும், 2006 சட்டப்பேரவை, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கவுரமமான தோல்வியையும் அதிமுக பெற்றபோது, அடுத்து 2011 முதல் 2016 வரை அசைக்க முடியாத கட்சியாக அதிமுகவை ஜெயலலிதா மாற்றினார். ஜெயலலிதாவின் தலைமையும், கட்சியை ராணுவக் கட்டுகோப்போடும் நடத்தியது உள்ளிட்ட அவரது அணுகுமுறைகள் தோல்விகளிலிருந்து மீண்டு வர அதிமுகவுக்கு உதவின. ஆனால், இன்று இரட்டைத் தலைமை என அதிமுகவை வழிநடத்திவரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இருவர் மத்தியிலேயே ஒருங்கிணைப்பு கிடையாது என்பதே உண்மை. ஆட்சியைத் தக்கவைக்கவும் பதவி, அதிகாரம் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் இருவரும் செய்துகொண்ட ஏற்பாடாகத்தான் இரட்டைத் தலைமைப் பதவிகளே உருவாக்கப்பட்டன.

அதோடு எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற வலிமையான தலைமை இல்லாதது, சசிகலா விவகாரம், டிடிவி தினகரனின் தனிக்கட்சி, இரட்டைத் தலைமை, கோஷ்டிப் பூசல் எனப் பல காரணங்களால் அதிமுக இன்று பலவீனமடைந்து வருகிறது. அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி ஒரு காரணமாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இல்லையென்ற நிலையிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. கருணாநிதி - ஜெயலலிதா காலத்தில், இவர்கள் இருவரும் உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரத்துக்கு வந்ததே கிடையாது. அறிக்கை விடுவதோடு நின்றுவிடுவார்கள். ஆனால், இந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தீவிரப் பிரச்சாரம் செய்தும் அதிமுக மோசமாகத் தோல்வியடைந்துள்ளது.

எங்கு தவறினார்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ்?

திமுக ஆட்சிக்கு வந்தது முதலே நீட் தேர்வு விவகாரம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற இரு விஷயங்களைத் தாண்டி அதிமுக வேறு விவகாரங்களுக்குச் செல்லவே இல்லை. இந்தத் தேர்தலில் இந்த விவகாரங்களோடு பொங்கல் பரிசில் ஊழல், ஒரே நாடு ஒரே தேர்தல் என நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களைத்தான் அதிமுக தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இவற்றையெல்லாம் மக்கள் பொருட்படுத்தவே இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. தொடர் தோல்விகளால் அக்கட்சித் தொண்டர்கள் கலக்கமடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் எதிர்காலம் பற்றிய கேள்வியும் வலுவாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

50 ஆண்டுகளைக் கடந்த கட்சி இது. இதில் சுமார் 45 ஆண்டுகள் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகியோர் வழிகாட்டலில் வெற்றி - தோல்வி என இரண்டையும் அதிமுக சந்தித்திருக்கிறது. ஆனால், தோல்வியடைந்த காலங்களில் குதிரை போல சட்டென எழுந்து ஓடியிருக்கிறது. ஆனால், இன்று தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துவரும் அதிமுக, தன்னுடைய பலவீனங்களைச் சரிசெய்யாவிட்டால் மீண்டுவருவது மிகப் பெரிய சவாலாகிவிடும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE