‘தமிழகத்தின் ஆபாச அரசியலை மக்கள் விரும்பவில்லை’: கமல் குமுறல்!

By காமதேனு

’நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்திருப்பது, தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது’ என்று காட்டம் தெரிவித்துள்ளார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தனது கட்சியினர் மற்றும் தமிழக மக்களுக்காக, அறிக்கை ஒன்றினை இன்று(பிப்.23) கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் தங்கள் கட்சியினருக்கு தெம்பளிக்கும் வகையிலும், தேர்தலில் வெற்றியடைந்த கழகங்களை சாடியும் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

உயிரே உறவே தமிழே என்று விளித்து, அந்த அறிக்கையில் கமல் ஹாசன் தெரிவித்திருப்பது:

’அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்.

வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2000 முதல் ரூ.8000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களின் நெஞ்சுரம் போற்றுதலுக்கு உரியது. அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்விகள் 2 வகைப்படும். ஒன்று, திருத்திக்கொள்ள வாய்ப்பில்லாத ’பர்மனென்ட் ஃபெய்லியர்’. இரண்டாவது, திருத்திக்கொண்டு வெற்றியை நோக்கி முன்னகரும் வாய்ப்புள்ள ’மைக்ரோ ஃபெய்லியர்’. நாங்கள் சந்தித்திருப்பது இரண்டாம் வகை.

பல இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்களர்களே தங்களது வாக்குகளைச் செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளைக் கழித்தால், இன்னமும்கூட குறைவான சதவீத மக்களே இந்தத் தேர்தலில் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது சுட்டுகிறது.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்பது சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாகச் சேர்ந்து தவறான முடிவை எடுப்பார்கள். வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு.

என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன்னர் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல’

இவ்வாறு தனது அறிக்கையில் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE