கூடலூர் அருகே திமுக தொண்டர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சியில் 10-ம் வார்டில் அதிமுக சார்பில், கணியம்வயலைச் சேர்ந்த நவுசாத் மனைவி ஷிம்ஜித் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட, திமுகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் எமிபோல் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஷிம்ஜித் தனது வீட்டின் முன்பு நின்றிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர் சமீர்(46), ஷிம்ஜித் தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து கிண்டல் செய்ததாகத் தெரிகிறது. இதை தனது கணவர் நவுசாத்திடம் ஷிம்ஜித் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த நவ்ஷாத், சமீரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது கத்தியை எடுத்து சமீரை குத்தினார். தடுக்க வந்த அஸ்கர்(38) என்பவரையும் நவ்ஷாத் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சமீர்(46) பரிதாபமாக உயிரிழந்தார். நவ்ஷாத் தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்த தேவர்சோலை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த அஸ்கரை மீட்டு, கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், உயிரிழந்த சமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தேவர்சோலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தரப்பில் கூறும்போது, கிண்டல் செய்ததால் செய்ததால் ஆத்திரத்தில் திமுக தொண்டரை, அதிமுக பெண் வேட்பாளரின் கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தனர்.