குரோம்பேட்டையில் ரூ.14 லட்சத்தில் 75 கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

குரோம்பேட்டை: குரோம்பேட்டை பிரதான சாலைகளை கண்காணிக்க 75 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஜி.எஸ்.டி சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக படம் பிடித்து, கண்காணிப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கும் திறன் கொண்ட 5 கண்காணிப்பு கேமராகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரோம்பேட்டை காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களுக்கான கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் அ.அமல்ராஜ் நிகழ்வுக்கு தலைமை தாங்கி, கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார். முன்னதாக காவல் நிலைய வளாகத்தில் அவர் மரக்கன்றை நட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் மகேஷ்வரி, தாம்பரம் காவல் மாவட்ட துணை ஆணையர் பவன் குமார், உதவி ஆணையர் நெல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் போலீஸார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கண்காணிப்பு கேமராக்களை அமைக்க போத்தீஸ் நிறுவனம் ரூ.12 லட்சமும், பார்வதி மருத்துவமனை ரூ.2 லட்சமும் நிதியுதவி செய்துள்ளன.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய குரோம்பேட்டை போலீஸார், “குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைப் பகுதியில் குற்றங்களை கண்காணிக்க சுமார் 100 கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளது. குற்றங்களை தடுப்பதற்கும், குற்றம் நடைபெற்றால் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் கண்காணிப்புக் கேமராக்கள் உதவியாக இருக்கிறது. புதிதாக அமைக்கப்பட்ட கேமராக்கள் அல்லாமல் ஏற்கெனவே உள்ள கேமரா அனைத்தும் ஒரே இடத்தில் கட்டுப்பாட்டு மையம் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE