உ.பியில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு: மாயாவதி வாக்களித்தார்

By காமதேனு

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில், 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது வாக்கை பதிவு செய்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

9 மாவட்டங்களில் 24,643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி வெளி ஆட்கள் உள்ளே வராமல் இருக்க, மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 2.13 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று முக்கியமாக ரேபரேலி மாவட்டத்திலும், விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. ரேபரேலி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சொந்த தொகுதியாகும்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, லக்னோவில் உள்ள முனிசிபல் நர்சரி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிப்பது மாபியாக்களுக்கு வாக்களிப்பது போன்றது என்பதை வாக்களிப்பதற்கு முன்பே உ.பி மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால் மக்கள் சமாஜ்வாதி கட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE