உதகை நகராட்சியில் அதிமுக வாரிசுகள் தோல்வி

By காமதேனு

நீலகிரி மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் நகராட்சிகளை அதிமுகவிடமிருந்து திமுக கைப்பற்றியது. நெல்லியாளம் நகராட்சியை திமுக தக்க வைத்துக்கொண்டது. பேரூராட்சிகளில் ஓவேலி மற்றும் சோலூரில் அதிமுக ஒரு வார்டிலும் வெற்றி பெறவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2011-2016 ஐந்தாண்டுகளில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் நகராட்சிகளை அதிமுக தன் வசப்படுத்தியது. திமுக நெல்லியாளம் நகராட்சியை கைப்பற்றியது. 2016-21 ஐந்தாண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்தாண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி தன் வசப்படுத்தியுள்ளது. உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் நகராட்சிகளை அதிமுகவிடமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது. நெல்லியாளம் நகராட்சியை திமுக தக்க வைத்துக்கொண்டுள்ளது.

உதகை நகராட்சியில் இதுவரை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸூக்கு தலைவர் பதவி ஒதுக்கப்படும். 2006-2011 காலக்கட்டத்தில் திமுக, காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்ட போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லலிதா தனபால் வெற்றி பெற்றார். இந்த முறை தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் 20 பேர் வெற்றி பெற்றுள்ளதால் திமுகவை சேர்ந்த பெண் வேட்பாளர் தலைவராகவும், திமுகவை சேர்ந்தவர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஓவேலி, சோலூர் பேரூராட்சிகளை முழுமையாக திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த பேரூராட்சிகளில் அதிமுக ஒரு வார்டிலும் வெற்றி பெறவில்லை. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அதிகரட்டி, பிக்கட்டி, தேவர்சோலை, உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கீழ்குந்தா, கோத்தகிரி, நடுவட்டம், ஓவேலி மற்றம் சோலூர் ஆகிய 11 பேரூராட்சிகளில் உள்ள 183 வார்டுகளுக்கான தேர்தல் முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில், 11 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி பெரும்பாலான வார்டுகளில் வெற்றி பெற்றன.

இவற்றில் ஓவேலி மற்றும் சோலூர் பேரூராட்சிகளில் அதிமுக ஒரு வார்டிலும் வெற்றி பெறவில்லை. இந்த பேரூராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மா.கம்யூ., கட்சிகள் தங்கள் வசப்படுத்தியுள்ளன.

அதிமுக நிர்வாகிகள், வாரிசுகள் தோல்வி;

உதகை நகராட்சியில் அதிமுகவில் முன்னாள் கவுன்சிலர் கு.சண்முகம் என்கிற சம்பத், கடந்த முறை போட்டியிட்ட 30வது வார்டு பெண்கள் வார்டாக அறிவிக்கப்பட்டதால், தனது மனைவி எஸ்.வசந்தகுமாரியை களமிறக்கி உள்ளார். இந்நிலையில், அவர் 18-ம் வார்டில் போட்டியிட வாய்ப்பு பெற்றார். இந்த இரு வார்டுகளிலும் இருவரும் தோல்வியுற்றனர்.

21வது வார்டில் முன்னாள் மாவட்ட செயலாளர் பால நந்தகுமார் தனது மனைவி பாமாவை நகராட்சி தலைவர் வேட்பாளராக களமிறக்கினார். வெற்றிக்காக பண பலம் மற்றும் படை பலம் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களிடையே நடந்தது. இதில், 40 வாக்குகளில் திமுக வேட்பாளர் வாணீஸ்வரி வெற்றி பெற்றார். இதே போல திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட மோகனா தன்னை எதிர்த்த அதிமுக வேட்பாளர் தனலட்சுமியிடம் 39 வாக்குகளில் தோல்வியை தழுவினார்.

உதகை நகர செயலாளராக உள்ள சண்முகம் 17வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரஜினிகாந்திடம் தோல்வியுற்றார்.

இந்நிலையில், திமுகவில் இடம் கிடைக்காததால் 16வது வார்டு மற்றும் 35வது வார்டுகளில் சுயேச்சைகளாக போட்டியில் புளோரினா மற்றும் ரமேஷ் ஆகியோர் திமுக வேட்பாளர்களை தோற்கடித்தனர்.

சீனியர்கள் வெற்றி:

உதகை நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜ் மற்றும் திமுக வேட்பாளர் தம்பி இஸ்மாயில் 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE