திருச்சியும் கரூரும் திமுகவுக்கே!

By கரு.முத்து

தமிழகத்தின் மைய நகரான திருச்சி மாநகராட்சியும், கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரான கரூர் மாநகராட்சியும் திமுக வசமாயின.

திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணி, இதுவரை 33 இடங்களை கைப்பற்றி விட்டது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைத்துவிட்டன என்றாலும், மேலும் பல வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. எனவே, திருச்சி மாநகராட்சி திமுக வசம் வந்துவிட்டது.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்த நிலையில், கரூர் மாநகராட்சியை கைப்பற்றி அதை முறியடித்திருக்கிறது திமுக.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர், அவர் திமுகவுக்கு வந்தபிறகு, திமுகவின் கோட்டையாக மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தனது கடுமையான உழைப்பால் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைத்தார். அதற்காக, அவருக்கு தற்போது கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி அளித்து அழகு பார்த்தது திமுக தலைமை.

தலைமை தன்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக, பல்வேறு உபாயங்களைக் கையாண்டு கோவையில் அதிக இடங்களில் திமுகவை வெற்றிபெற வைத்திருக்கிறார். அதே நேரத்தில், தனது சொந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான உள்ளாட்சி இடங்களையும் திமுகவுக்கு வசமாக்கி இருக்கிறார்.

அதன்படி கரூர் மாநகராட்சியும் திமுக வசமாகியுள்ளது. கரூர் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 23 வார்டுகளை திமுக பிடித்திருக்கிறது. ஒரு வார்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகள் இருவரும் திமுக ஆதரவாளரகள் என்பதால், மாநகராட்சி சுலபமாக திமுகவின் வசமாகியிருக்கிறது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளவற்றில் அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE