நாகர்கோவிலில் மேயர் வேட்பாளர்கள் மூவருமே வெற்றி!

By என்.சுவாமிநாதன்

நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாஜக ஆகியோர் மேயர் வேட்பாளராக முன்னிறுத்திய மூவரும் வெற்றி பெற்றுள்ளனர். அதேநேரம், திமுக மேயர் பதவிக்குத் தேவையான பெரும்பான்மை கவுன்சிலர்களைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மீனா தேவ் (பாஜக)

நாகர்கோவில் மாநகரில் பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டவர் மீனாதேவ். ஏற்கெனவே, இருமுறை நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்தவர் மீனாதேவ். இவர் இந்த முறை 29-வது வார்டில் வேட்பாளராகப் போட்டியிட்டார். இதில் மீனாதேவ் வென்றார். துரதிஷ்டவசமாக இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் (11.30 நிலவரப்படி) இந்த ஒரு வார்டில் மட்டுமே பாஜக வென்றுள்ளது.

மகேஷ் (திமுக)

நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் மகேஷ், 4-வது வார்டில் போட்டியிட்டார். ஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சிறந்த மாநகரச் செயலாளர் என்னும் விருது பெற்றவர். இவர் போட்டியிட்ட வார்டில் கரை சேர்ந்துள்ளார். இத்தோடு சேர்ந்து இப்போதைய நிலவரப்படியே திமுக, காங்கிரஸ் கூட்டணி 15-க்கும் அதிகமான இடங்களில் வென்றுவிட்டதால், மேயர் பதவியை நோக்கி நகர்கிறார் மகேஷ்.

ஸ்ரீலிஜா

அதிமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா மேயர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். 11-வது வார்டில் இவர் வெற்றிபெற்றுள்ளார். இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி ஸ்ரீலிஜாவும், 12-வது வார்டில் வென்ற சகாயராஜும் மட்டுமே அதிமுக சார்பில் வென்றுள்ளனர். இதனால் அதிமுக, பாஜக 2 கட்சிகளும் மேயர் ரேஸில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, இருமுறை நகரசபைத் தலைவியாக இருந்த பாஜகவின் மேயர் வேட்பாளர் மீனாதேவ், அதிமுகவின் மேயர் வேட்பாளர் ஸ்ரீலிஜா ஆகியோர் வெறுமனே வார்டு கவுன்சிலராக மட்டுமே அங்கம் வகிக்கும் சூழல் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE