‘வார்டு மெம்பருக்கு வென்றால் மேயர்’ என்ற கருத்தோடு சென்னை மாநகராட்சி 99-வது வார்டில் போட்டியிட்ட சிவகாமி ஐஏஎஸ் தோல்லி அடைந்தார்.
சமூக சமத்துவப் படை என்ற கட்சியை நடத்திவருகிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான சிவகாமி. கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது அதிமுக கூட்டணியை ஆதரித்த அவர், இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு சென்னை மேயர் பதவியை அதிமுக தர வேண்டும் என்று கேட்டார். ஜெயித்தால் பார்க்கலாம் என்று சொன்ன அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள், அவருக்கு ஒரே ஒரு கவுன்சிலர் சீட் மட்டும் கொடுத்தார்கள்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி 99-வது வார்டில் அதிமுக கூட்டணி சார்பில் சிவகாமி ஐஏஎஸ் களமிறங்கினார். ஒரு கட்சியின் மாநில தலைவர் கவுன்சிலர் சீட்டுக்குப் போட்டியிடுவதா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, கவுன்சிலராக வென்றால்தானே மேயராக முடியும் என்று பதில் சொன்னார் சிவகாமி.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையில், பரிதாபமாக தோற்றுப்போனார் சிவகாமி. அவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனுமான பரிதி இளம் சுருதி அந்த வார்டில் வெற்றிபெற்றார்.