விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் களமிறங்கியது. அதே நேரத்தில் தனிச்சின்னத்தில் (தென்னை மரம்) அக்கட்சி போட்டியிட்டது. குறைந்த சீட்களே ஒதுக்கப்பட்டதாக மன வருத்தம் இருந்தாலும்கூட, பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்துடன் அக்கட்சி திமுக கூட்டணியிலேயே தொடர்ந்தது.
மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில், விசிகவுக்கு 2 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதில் 71-வது வார்டில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் இன்குலாப் என்ற முனியாண்டி, அதிமுகவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.
அவர் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-
விசிக - 1,952
அதிமுக - 1,918
இதன் மூலம் 34 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் முனியாண்டி. 50 ஆண்டுகளாக மக்கள் மனதில் பதிவான இரட்டை இலையை, இந்தத் தேர்தலில் அறிமுகமான தென்னை மரம் சின்னத்தின் மூலம் வென்றது சாதாரண விஷயமல்ல என்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள். இந்த வார்டில் பாஜக வேட்பாளர் 150 ஓட்டுகூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, 30-வது வார்டில் விசிக வேட்பாளர் மோகனா களமிறங்கியுள்ளார். அந்த வார்டுக்கான முடிவு இன்னும் வரவில்லை. அதிலும் விசிக வெல்லவே வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.