பஞ்சாப் தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு; தொங்குசபை அச்சத்தில் அரசியல் கட்சிகள்

By ஆர். ஷபிமுன்னா

வழக்கமாக மற்ற மாநிலங்களைவிட அதிகமான சதவீதத்திலான வாக்குகள் பதிவிற்கு பெயர் போனது பஞ்சாப். இம்மாநிலத்தின் 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், கடந்த மூன்று தேர்தல்களைவிடக் குறைவான சதவீதத்தில் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதன்மூலம், தொங்குசபை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக பஞ்சாபில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு அச்சங்கள் எழுந்துள்ளது.

பஞ்சாபின் சட்டப்பேரவை தேர்தல்களில் கடந்த 2007ல் 77.20 சதவீத வாக்குப்பதிவாக சிரோமணி அகாலி தளம்(எஸ்ஏடி) கட்சியின் ஆட்சி அமைந்தது. இதனுடன் பாஜக கூட்டணி கட்சியாகவும் இணைந்திருந்தது. இதைவிட அதிகமாக 2012 சட்டப்பேரவை தேர்தலில் 78.30 சதவீதத்தில் வாக்குகள் பதிவாகின. இந்தமுறையில் அங்கு பாஜக ஆதரவிலான எஸ்ஏடி ஆட்சியை தொடர்ந்தது. மூன்றாவதாக 2017 இல் சற்று குறைவாக 77.20 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அப்போது, முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் தனது ஆட்சியை மீட்டிருந்தது.

இத்தனைக்கும் அப்போது டெல்லியில் ஆட்சி அமைத்த புதிய கட்சியான ஆம் ஆத்மியும் முதன்முறையாகப் போட்டியில் இருந்தது. ஆம் ஆத்மிக்கு எஸ்ஏடியை விட அதிகமக 20 தொகுதிகள் கிடைத்து முக்கிய எதிர்க்கட்சியானது. எனினும், இந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மூன்று தேர்தல்களை விடக் குறைவான 68.03 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இது நான்கு முனைப்போட்டியின் தாக்கம் எனவும், இதனால் தொங்குசபை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் பஞ்சாபின் கட்சிகள் இடையே அச்சம் உருவாகி உள்ளது.

பஞ்சாப் அரசியலில் 2017 வரை இருமுனைப்போட்டிகள் மட்டுமே நிகழ்ந்தன. இதில், காங்கிரஸும், எஸ்ஏடி கூட்டணியும் மாறி, மாறி ஆட்சிகளில் அமர்ந்தன. ஆனால், தற்போது முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடனான தனது 27 வருட உறவை எஸ்ஏடி முறித்துக்கொண்டது. இதற்கு, மத்திய அரசின் வேளாண் சட்டதிருத்தங்கள் காரணமாயின. இதனால், மேலும் ஒரு புதிய கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட வேண்டியதாயிற்று. காங்கிரஸிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனப் புதிய கட்சியை அமைத்த கேப்டன் அம்ரிந்தர்சிங்கும் இதில் சேர்ந்திருந்தார். எஸ்ஏடியிடமிருந்து பிரிந்த கட்சியான அகாலி தளம் சம்யுக்த் கட்சியும் பாஜக கூட்டணியில் இணைந்தது.

பிரியங்கா காந்தி

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் சார்பில் ஒரு புதிய கட்சியும் களம் இறங்கி இருந்தது. இது ஆம் ஆத்மியுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. எஸ்ஏடி, உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) தனது கூட்டணியில் சேர்த்தது. காங்கிரஸ் மட்டுமே தனித்து போட்டியிட்டிருந்தது. இதில், காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையில் மட்டும் போட்டி இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், தேர்தலின் இறுதிகட்டத்தில் அனைத்து கட்சிகளால் எழுந்த தீவிரப் பிரச்சாரத்தால் நான்குமுனைப் போட்டியானது.

இந்த திருப்பத்திற்கு, பஞ்சாபின் டேராக்கள் எனப்படும் ஆன்மிக மடங்களின் தலைவர்கள் முக்கியக் காரணமாயினர். இவர்கள் தேர்தலுக்கு ஒரிரு நாட்கள் முன்பாக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் சந்திப்புகள் நிகழ்த்தினர். இது பாஜகவிற்கு தமது ஆதரவை அளிக்கவே எனத் தகவகள் வெளியாகின. வேறு சில டேராக்களின் ஆதரவை எஸ்ஏடி மற்றும் ஆம் ஆத்மியும் மறைமுகமாகப் பெற்றன.

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் காங்கிரஸுக்கு ஆதரவளித்திருந்தனர். சீக்கியர் மற்றும் இந்து வாக்காளர்களும் வெளிப்படையாகவே காங்கிரஸுக்கு அளித்த ஆதரவால் அதற்கு 77 தொகுதிகளுடன் தனிமெஜாரிட்டி கிடைத்தது. இந்தமுறை நகர்ப்புறங்களிலான வாக்குகள் பதிவு குறைந்ததும் காங்கிரஸுக்கு இழப்பாகவே இருக்கும் என எதிர்நோக்கப்படுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால்

பாஜகவின் தனிஆவர்த்தனம்

காங்கிரஸுக்கு நேரடிப் போட்டியாக இருந்த ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மான் அறிவிப்பால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாயினர். ஆனால், டேராக்களின் திடீர் திருப்பத்தால், ஆம் ஆத்மியின் பல வேட்பாளர்களின் வெற்றி கேள்விக்குறியாகி விட்டன. ஆம் ஆத்மியிடம் இருந்த இந்து வாக்குகளையும் பாஜக இந்த தேர்தலில் பிரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலம், பாஜகவும் முதன்முறையாக பஞ்சாபில் தனிஆவர்தனம் போடத் தயாராகி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அகாலி தளத்தின் நிலை

பஞ்சாபின் முன்னாள் ஆட்சியாளர்களான எஸ்ஏடியினருக்கு பஞ்சாபில் சுமார் 30 சதவீதம் நிரந்தர வாக்காளர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவர்களுடன் இந்தமுறை கூட்டு சேர்ந்த உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிஎஸ்பியால் பட்டியலின வாக்குகளும் எஸ்ஏடிக்கு கணிசமாகக் கிடைத்துள்ளன. இந்த நான்குமுனைப் போட்டியால் தொங்குசபை ஏற்படும் பேச்சுக்கள் முக்கியத் தலைவர்கள் இடையேயும் உருவாகி உள்ளது.

அமித்ஷா கருத்து

இதன் மீது ஒரு பேட்டியில் பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷா கூறும்போது, ‘தொங்குசபை வந்தால் ஒத்த கருத்துள்ளவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்’ எனக் கூறியுள்ளார். இவர்போன்ற தலைவர்களின் பேச்சுக்கள், பஞ்சாபின் முடிவுகளில் தொங்குசபைக்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதை காட்டுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE