கடலூரில் வாக்கு எண்ணும் பணியின்போது வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்த அறையை திறக்க முடியாமல், அரை மணி நேரம் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
கடலூர் மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள், கடலூரில் உள்ள ஜோசப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ரஞ்சித் சிங் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டன. அதற்கு அடுத்ததாக வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தை தேர்தல் அலுவலர்கள் திறக்கச் சென்றனர். அந்த அறைக்கு இரண்டு பூட்டுகள் போட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு பூட்டுக்கான சாவி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனால், ஒரு பூட்டு மட்டும் திறக்கப்பட்டு, மற்றொரு சாவி இல்லாததால் தடுமாற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அதனால் சாவி இல்லாத பூட்டை வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் முன்னிலையில் உடைத்து திறந்தனர். அதன் பிறகே, வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்க 40 நிமிடங்கள் காலதாமதமாகியது.